கரோனா உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமியர்களைத் தள்ளி நிற்கச் சொன்னாரா சாத்தூர் ராமச்சந்திரன்?- வைரலாகும் ஆடியோ

By இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாமல் வந்த இஸ்லாமியர்களை விலகி நிற்குமாறு கூறியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கும் ஆடியோ பேச்சு வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வாடுகின்றன. இந்நிலையில், முகக்கவசம் மற்றும் அரிசி வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த வாரம் நடந்தது.

இதில் பங்கேற்ற திமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருநங்கையர் உள்ளிட்ட பலருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகளான இஸ்லாமிய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்திருந்த இஸ்லாமியர்கள் சிலரிடம், முகக்கவசம் அணியவேண்டியதன் கட்டாயம் குறித்து சாத்தூர் ராமசந்திரன் எம்.எல்.ஏ. கடிந்து பேசியுள்ளார்.

இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது குறித்து ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "அருப்புக்கோட்டையிலிருந்து பரக்கத் பேசுகிறேன். உழவர் சந்தையில் மாஸ்க் வழங்கும் விழாவில் பங்கேற்ற சாத்தூர் ராமச்சந்திரன் அங்கு சென்ற இஸ்லாமியர்களைப் பார்த்து கரோனாவே உங்களால்தான் பரவுகிறது. முதலில் வெளியே செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அனைத்து ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

இந்த ஆடியோ இஸ்லாமிய இயக்கத்தினர் உள்ளிட்ட பலருக்கும் சென்றடைந்துள்ளது. இது குறித்து ஜமாத் நிர்வாகிகள், திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பேசியுள்ளனர். தான் தவறாக ஏதும் பேசவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியத் தலைவர்கள் பலரை அவரே தொடர்புகொண்டு தான் யாரையும் புண்படுத்தும்படியாக பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டச் செயலர் ஜிந்தாஷா சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய ஆடியோ வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

ஆடியோவில், "வணக்கம் மாமா நான் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசுகிறேன். இப்போது இவர்கள் சொல்வது எல்லாம் பொய் மாமா. நான் திட்டியது வாஸ்தவம். மாஸ்க் போடாமல் வந்ததால் திட்டினேன். உங்கள் தெருவில்தானே பாதிப்பு வந்துள்ளது. நீங்கள் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்களே, இப்படி வந்தால் உங்கள் குடும்பம்தானே பாதிக்கும் என சப்தம் போட்டது வாஸ்தவம். நான் இல்லையெனக் கூறவில்லை.

உங்கள் தெருவை பிளாக் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். விருதுநகரில் பல தெருக்களை கட்டை கட்டி மறித்துவிட்டனர். நம்ம தெருவில்தான் நான் கட்டைபோட்டு கட்டவிடவில்லை. போலீஸாரும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் இங்கு கட்டை போட்டுகட்ட வேண்டும் என்றார்கள்.

ஒருவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரையும் நீங்கள் கண்டறிந்துவிட்டீர்கள். இனிமேல் ஏன் கட்டை கட்டவேண்டும் என்று கூறி நான் நிறுத்திவிட்டேன். எல்லா ஊரிலும் ஜமாத்திற்கு சென்று வேறு ஆட்கள் வந்துள்ளார்களா என சோதனை செய்தார்கள். உங்கள் ஜமாத்துக்கு நாங்கள் ஆளே அனுப்பவில்லை. நம்ம ஊரில் மட்டும்தான் நான் நமது மக்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வைத்துள்ளேன். ஏனெனில் அந்த ஓட்டு முழுவதும் என் ஓட்டு என்று தெரியும்.

பாதிப்பு ஏற்பட்டால் 15 நாள் தனியாக வைத்துவிடுவார்கள். வீட்டு வாசலில்அறிவிப்பு பேப்பர் ஒட்டிவிடுவார்கள். இது அசிங்கமாகஇருக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட உங்களிடம் பேசமாட்டார்கள். நான் பேசியதை வேண்டுமென்றே தவறாகப் பரப்பிவிட்டார்கள். அங்கிருந்த 3 பேரும் எங்களது கட்சிக்காரர்கள். இவர்கள் மூவரும் தான் என்னைப் பார்ப்பார்கள். நான் அந்த மூவரைத்தான் திட்டுவேன்.

அருப்புக்கோட்டையில் போலீஸ் தொந்தரவோ, தாசில்தார் தொந்தரவோ, கலெக்டர் தொந்தரவோ இல்லாமல் நான் தான் பார்த்துக்கொண்டுள்ளேன். இல்லையெனில் உங்களை பாதி கிறுக்காக ஆக்கியிருப்பார்கள்.

கட்டையைக் கட்டவேண்டும் என்று மல்லுக்கட்டியிருப்பார்கள். அதனால் யார் சொன்னாலும் நீங்கள் நம்பவேண்டாம். திட்டியது உண்மை. நீ செயலாளர், நாளைக்கு நீ தேர்தலுக்கு வேண்டுமா வேண்டாமா எனத் திட்டினேன். நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்று தான் திட்டினேன். அதை தவறாக எடுத்துக்கொண்டால் எப்படி?

மாக்ஸ் போடாத எல்லோரையும் தான் திட்டுகிறேன். இந்துவாக இருந்தாலும் திட்டுகிறேன். கிறிஸ்தவராக இருந்தாலும் திட்டுகிறேன்.

யாராக இருந்தாலும் தான் திட்டுகிறேன். உங்களை நான் எப்படி இழப்பேன். புதிய பேருந்து நிலையத்தில் கூட கடைபோடக்கூடாது என்றார்கள்.

கடைபோட நான்தான் அனுமதியளித்தேன். சாமியான பந்தல் போடச் சொன்னதும் நான்தான். நல்லது எதுவும் வெளியில் வருவதில்லை. கெட்டது மட்டும் தானே வருகிறது." எனப் பதிவாகியுள்ளது.

ஆடியோ மூலமே உரிய விளக்கம் அளித்து வாட்ஸ் அப்பில் வெளியிடுமாறு ஜிந்தாஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் ஆதாயத்தோடு சாத்தூர் ராமச்சந்திரன் எம்ல்ஏ. பேசியதாக வெளியான ஆடியோ வாட்ஸ் அப்-பில் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் பெற சாத்தூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டபோது 'இது முடிந்துபோன விவகாரம்' எனக்கூறி கருத்து கூற மறுத்துவிட்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் மாவட்டச் செயலர் ஜிந்தா ஷாவை பலமுறை தொடர்பு கொண்டும் போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்