அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை இனி நேரடியாக வழங்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்திருக்கின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், இதற்கு முன்பு இயற்கைப் பேரிடர்களின்போது ஆபத்தில் இருந்தவர்களுக்கு மக்கள் எப்படியெல்லாம் ஆதரவுக் கரம் நீட்டினார்கள் என்பதைச் சுற்றிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "கொடுங்காலத்தில் உதவுவதுதான் மனிதாபிமானம். அதிலும் திக்கற்றோருக்கு உதவிடுவது தலையாயக் கடமை. அதைத்தான் தமிழக மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் இன, மதம், சாதி, தொழில் என்ற வேறுபாடு இல்லாமல் தங்களாலான உதவியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன், சென்னையில் இடுகாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் நான்கு பேர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியதை செய்திகளில் பார்த்தோம். வாழ்க்கையின் கடைநிலையில் இருப்பதாக மற்றோர் நினைக்கும், அந்தத் தொழிலாளர்கள்கூட தங்களுக்கு உதவும் மனம் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், அந்த உதவியைக் கூட செய்யக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது என்ன கொடூரமான சிந்தனை. 2015 சென்னை பெரு வெள்ளத்தின்போது, சென்னை மக்களின் பசியைப் போக்கியது அரசு அல்ல. பொதுமக்களே களத்தில் இறங்கி உதவியதால்தான் பலர் உயிர் பிழைத்தனர். அதுபோல வெள்ளத்திற்குப் பின்பான பல நாட்களுக்கு தன்னார்வலர்களும், திமுக உள்ளிட்ட அரசியல் இயக்கங்களும்தான் உணவளித்து உதவின. பார்ப்பனர் பகுதியில், இஸ்லாமிய இயக்கங்கள் வீடு தேடி உணவளித்ததை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார்கள் அவர்கள்.
செம்பரப்பாக்கம் ஏரியை முன்னரே திறந்து விடாமல் இருந்ததால் ஏரி நிரம்பி தானாக உடைந்து சென்னையை மூழ்கடித்தது. அப்போது ஒரு உதவியும் செய்யாமல் ஆளுங்கட்சியினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், உதவிய தன்னார்வலர்களிடமிருந்த பொருட்களைப் பிடுங்கி ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டி தாங்கள் கொடுத்தது போல், காட்டிக் கொண்டார்கள்.
கஜா புயலின் போதும், வெளியூரிலிருந்து சென்ற நிவாரணப் பொருட்கள் ஏற்றிய லாரிகளை ஹைஜாக் செய்து, அதே ஸ்டிக்கர் அராஜகத்தை அரங்கேற்றினர். பல இடங்களில் பாதுகாப்போடுதான் சென்று உதவும் நிலை ஏற்பட்டது. இதுவரை ஆளுங்கட்சி அதிகாரத்தோடு, ஆங்காங்கே உள்ள அதிமுகவினர் 'ஸ்டிக்கர் அரசியல்' செய்ததை, இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அரசு மூலமாக செய்ய நினைக்கிறார் எனத் தோன்றுகிறது.
தன்னார்வலர்கள் கொடுக்கும் உதவிகளை அதிமுக நிர்வாகிகளை வைத்துக் கொடுப்பார்கள். அப்படி எல்லாம் நடக்காது என்று சிலர் சொல்லக் கூடும். அரசுப் பணத்தில் கொடுத்த பொங்கல் உதவித் தொகையை வழங்கியபோது, அதிமுக கொடி கட்டி, எம்ஜிஆர் பாட்டுப் போட்டு, அதிமுக கிளைச் செயலாளர்கள் கொடுத்த கூத்தெல்லாம் ஏற்கெனவே பார்த்ததுதான்.
இப்போது, கரோனா ஊரடங்குக்காக கொடுத்த ரூபாய் 1,000 உதவித் தொகையை அதிமுகவினர் தங்கள் கையால் கொடுத்து, புகைப்படம் எடுத்து வெளியிட்ட அசிங்கமும் நடந்தது. அதேபோல்தான் இப்போதும் செய்வார்கள். இல்லாவிட்டால் ஊரடங்கு அறிவித்து 19 நாட்கள் கழித்து, இப்போது இவ்வளவு அவசரமாக இந்தத் தடையை அறிவிப்பதற்கு காரணம் என்ன ?
திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூர் முழுவதும் சுற்றிச் சுழன்று உதவிய காட்சிகள் வெளிவந்தன. தன் தொகுதிக்கு மாத்திரமல்லாமல் பல பகுதிகளுக்கும் சென்று உதவிப் பொருட்களை வழங்கினார். திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகளையும் உதவ உத்தரவிட்டார் ஸ்டாலின்.
தமிழகமெங்கும் திமுகவினர் களத்தில் உள்ளனர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, உதவி கோருபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவ அறிவுரை வழங்கியுள்ளார். இளைஞரணியினர் உதவும் படங்களை அவரே வெளியிட்டு பாராட்டுகிறார். ஆனால், ஆளும் அதிமுகவினர் இதுபோல் எங்காவது செயல்படுகிறார்களா என்றால், எங்கும் இல்லை.
திமுக இப்போதுதான் என்றில்லை, எப்போதெல்லாம் தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் களம் இறங்கியிருக்கிறது. அது அண்ணாவும், கலைஞரும் கற்றுக் கொடுத்தது.
தனித் திராவிட நாடு கேட்டு திமுக போராடிக் கொண்டிருந்த நேரம். நாடாளுமன்றத்தில் அண்ணா கடுமையாக வாதாடி, பிரதமர் நேரு உடன் சமர் செய்தார். அந்த நேரத்தில், சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. அப்போது மத்திய அரசுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று அறிவித்ததோடு, யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, திமுக தோழர்கள் ரத்த தானம் செய்ய உத்தரவிட்டார் அண்ணா. யுத்த நிதி திரட்டி அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜரிடம் வழங்கினார்.
உடல் நலிவுற்ற நேரத்திலும், எதிர்க்கட்சியாக இருப்பினும், பெரு வெள்ளத்தின் போது, சென்னையிலிருந்து திருவாரூருக்குப் பயணம் செய்து, தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தலைவர் கலைஞர்.
இந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மக்களுக்கு தனிப்பட்ட உதவி என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வி அவர் மனதிலேயே எழுந்திருக்கும் போலும். அதனால்தான் அடுத்தவர் செய்யும் உதவியை தடுக்க முனைந்திருக்கிறார். இது பெரும் பாவம். அரசே எல்லாக் காரியமும் செய்திட முடியாது. மக்களும் உதவிட வேண்டும்.
பல இடங்களில், மலைவாழ் மக்களுக்கு ரேஷன் கார்டு இல்லை என்று அரசு உதவி கிடைக்காமல் தவிக்கிறார்கள். அங்கெல்லாம் தன்னார்வலர்கள் தான் ஆபத்பாந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்கும் உதவிகளைத் தடுத்தால் நீங்கள் கையில் கட்டியிருக்கும் கயிறுகள் கூட உங்களை காப்பாற்றாது. எனவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்து, புண்ணியம் சேர்ப்பவர்களை தடுத்து, பாவம் சேர்க்க முயலாதீர்கள்” என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago