துபாயில் பணியாற்றும் தமிழர்களைக் காக்க நடவடிக்கை தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.13) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவல் அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், துபாயில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்துறை தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
அதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதியம் குறைப்பு, தற்காலிகப் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். துபாய் அரசின் மனிதாபிமானமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
வளைகுடா நாடுகளில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக துபாய் எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் அதிகம் பேர் பணியாற்றுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் 28 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். அவர்களில் 10 லட்சம் பேர் கேரளத்தையும், 5 லட்சம் பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற நாடுகளைப் போலவே துபாயிலும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால், தொழிலாளர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
» கரோனா பாதிப்பால் கொள்முதல் நிறுத்தம்: மதுரையில் மலைபோல் குவிந்துள்ள நெல்
» கரோனாவும் - கருப்புசாமியும்: மதுரையில் மக்களைக் கவர்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம்
துபாயில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய சூழலில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய இடங்களில் தங்க வைத்து, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக பெரும்பான்மையான தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கடியான அறைகளில் பல அடுக்குப் படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிறிய அறைகளில் கூட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் போதிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. அதனால், துபாயில் பணியாற்றிய கடையநல்லூரைச் சேர்ந்த முகமது ஷா என்பவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். வழக்கமாகவே துபாயில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது மட்டுமின்றி, மருந்து விலைகளும் மிக அதிகம் ஆகும்.
தமிழகத்திலிருந்து துபாய்க்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மருந்துகளை தமிழகத்திலிருந்து அஞ்சல் மூலமாக வரவழைத்துப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அஞ்சல் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொழிலாளர்களின் உடல்நிலையை மோசமாக்கக்கூடும்.
மற்றொருபுறம், கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்கும் வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், அவர்களின் ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பில் எத்தகைய மாற்றங்களையும் செய்து கொள்ளலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தொழிலாளர்களின் ஊதியம் 30% வரை பிடித்தம் செய்யப்படவுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய தொழிலாளர்களை 6 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பில் அனுப்பியிருப்பதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். பலர் உணவின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குவைத், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நிலவுகிறது. வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும், கட்டமைப்பு வளர்ச்சியிலும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
அதற்கு காரணமான இந்தியத் தொழிலாளர்களை நெருக்கடியான நேரத்தில் வளைகுடா நாடுகளின் அரசுகள் கைவிடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. இந்தியர்களின் தியாகத்தை மதித்து அவர்களுக்கு தேவையான வசதிகளையும் வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அரசுகளை தொடர்பு கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்துப் பேச வேண்டும். துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில், சமூக இடைவெளியுடன் வாழ வகை செய்தல், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை மருத்துவம் வழங்குதல், கரோனா அச்சம் விலகும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்யும்படி சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago