கோல்டன் பீரியட்; பயன்படுத்தத் தவறினால் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்: 15 யோசனைகளை முன்வைத்து ஸ்டாலின் முதல்வருக்குக் கடிதம்

By செய்திப்பிரிவு

கோல்டன் பீரியடை அரசு சரியாகப் பயன்படுத்தத் தவறினால், சரித்திரத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.11) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், "கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுகவின் சார்பில் எனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலுக்கு உட்பட்டு விட்டதா என்பது குறித்து, தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்களாக உள்ளன. போதுமான விரைவுப் பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு இன்னமும் செய்யப்படாத நிலையில், மக்கள் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற ஐயப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக, தொடக்கம் முதலே எச்சரித்து வந்தது. சட்டப்பேரவையை ஒத்தி வைப்பது, நோய்த் தொற்று குறித்து முறையான சோதனை செய்வது, போதிய எண்ணிக்கையில் கரோனா தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளை உருவாக்குவது, பிபிஇ, முகக்கவசங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தேவைப்படும் எண்ணிக்கையில் வாங்குவது, பாதிக்கப்படுவோருக்கான நிவாரணம், அடுத்தக்கட்டமாக பாதிக்கப்படும் பொருளாதாரத்தை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, சமூகக் கடமை, பொறுப்பு என்ற அடிப்படையில், சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

எனினும், கேரளாவில் நோய்த் தொற்று வந்தபோதே நாம் விழித்துக் கொள்ளாதது, பிறகு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போதுமான கவனம் செலுத்தாதது போன்றவற்றால், தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்று சமூக அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள்.

3. நிலைமை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தபோதும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் விரைவாகவும் முழுமையானதாகவும் எடுக்கப்பட்டதா என்ற அய்யப்பாடு பெரும்பாலானோர் மனங்களிலிருந்து அகன்றபாடில்லை. சோதனை செய்வதற்கான ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக்கூட மத்திய அரசின் கண் அசைவுக்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரே தேசம் - ஒரே கரோனா - ஒரே கொள்முதல் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் மேலும் தாமதமாகி வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

நோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன், அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்திட வழிவகை செய்திட வேண்டும். இவை மட்டும்தான் தவிக்கும் மக்களைக் காப்பாற்றிடக் கூடியவை என்பதை இந்த தருணத்தில் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

4. நோய்த் தாக்கம் அதிகமாகிவிடக் கூடாது என்று பெரிதும் விழைந்திடும் அதே நேரத்தில், ஒருவேளை அரசின் முயற்சிகளையெல்லாம் தாண்டி, தாக்கம் அதிகமாகி விட்டால், அதனை எதிர்கொள்ள அவசர நிலை ஏற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் இருந்தாக வேண்டும்.

அதிகமான நோயாளிகளை எதிர்கொள்ளும் பொருட்டு படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துதல், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உற்பத்தி அல்லது கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்.

5. கரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். முறையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் (Personal Protective Equipments) அளிக்கப்பட வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளிலுள்ள கரோனா நோய் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே கரோனா பாதுகாப்புத் தனிநபர் கவசங்கள், உபகரணங்கள் உள்ளதென்றும், அதுவும் உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின்படி, மருத்துவப் பணியாளர்களைத் தொற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்குமளவுக்குப் போதுமான வரையறைகளின்படி அமைந்திடவில்லை என்றும் அறியப்படுகிறது. இதில் கவனம் செலுத்துங்கள்.

தாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்கும், கரோனா களப்பணியாளர்களுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

6. பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, போன்றவற்றில் ஒளிவு மறைவு சிறிதுமின்றி வெளிப்படைத்தன்மை வேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை அதிகரிக்கும். முக்கியமான இந்த எண்ணிக்கைகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன.

7. தனித்திருத்தல் என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏற்கெனவே ஒடிசா முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி வரையும், பஞ்சாப் மாநில முதல்வர் மே 1-ம் தேதி வரையும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள். ஆகவே, தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.

8. அதே நேரத்தில், ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், சிறு - குறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வீடில்லாதோர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் அனைவருக்குமான வாழ்வாதாரத்தை - உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. இவை கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதும் அதே கருத்தை, மீண்டும் வலியுறுத்துகிறேன்.

9. பாதிப்புக்குட்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையே ஆகும். சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அவற்றுடன் கரோனா நோய்த் தொற்று பரவாத வகையில் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்கிட வேண்டும். வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகளை, அத்தியாவசியப் பணிகளாக அறிவிப்பது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்.

10. இது சுகாதார, மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல; சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல், எதிர்கால பிரச்சினையாக மாறி வருகிறது. எனவே, இதுகுறித்து பல்வேறு குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு அவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இந்தியப் பிரதமர், SAARC மற்றும் அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் வேளையில், தமிழக அரசு அது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றாதது, ஜனநாயக நெறிகளைப் போற்றுவதாகாது.

11. இந்தச் சூழ்நிலையிலும் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு, தராதது கடுமையான கண்டனத்துக்குரியது. அதைவிட மிக மோசமான நடவடிக்கையாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு ரத்து செய்து இருப்பது.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் திமுக சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிந்துவிடவில்லை. கேட்ட நிதியைப் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைய வேண்டும். நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்திருப்பதை தமிழக அரசு வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.

12. இதேநேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை மாநில அரசும் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அம்முடிவை தவிர்க்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காகத் தான் அந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள். இது சட்டப்பேரவை உறுப்பினர்களின் தார்மீக உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல.

13. மக்கள் நலனுக்காகப் போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் வேண்டும். உயர் நீதிமன்றம் அவற்றைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியும் இன்னும் நடைபெறவில்லை.

14. கரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளிட்ட களப்பணியிலிருக்கும் எல்லாத் துறைகளையும் சேர்ந்த அனைத்துப் பேரிடர் காலக் களப்பணியாளர்களுக்கும், உரிய அளவில் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.

15. இந்நேரத்திலும் ஒவ்வொரு நொடியும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகைகள், ஊக்க ஊதியங்கள் கொடுத்து அரசு காக்க வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களையும் அரசு ஊழியர்கள் போல இப்பேரிடர் காலத்தில் கருதி உதவிகள் செய்தாக வேண்டும்.

இப்போது நாடும், நம் மாநிலமும் எதிர்கொள்வது மிகமிகக் கடுமையான, சோதனையான காலக்கட்டம்; அசாதாரணமான கட்டம். இதை சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது என்பதை அனைவரும் அறிவர். இது போன்ற சோதனை இனியும் ஏற்பட்டுவிடக் கூடாது. இத்தகைய சோதனையானதும் சோகம் சூழ்ந்திருப்பதுமான நேரத்தில் அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் 'கோல்டன் பீரியட்' தான். அந்த கோல்டன் பீரியடை அரசு சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். இதை முறையாகப் பயன்படுத்திடத் தவறினால், சரித்திரத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

அரசின் எச்சரிக்கையான முழுமையான நடவடிக்கைகளில்தான், இந்நாட்டு மக்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. திறந்த மனதுடன், உண்மையான அக்கறையுடன், கனிவான மனத்துடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும் தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

'தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்' மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்