நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள கோட்டாறு, செட்டிக்குளம், வேப்பமூடு பகுதிகளில் அடிக்கடி விஜயனைப் பார்க்கமுடியும். சிலரது பார்வையில் கோமாளியாகவும் அவர் தெரிவதுண்டு. காரணம், 'சந்திரமுகி' திரைப்படத்தில் வரும் ‘கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைத்துக் கொண்டாள்’ என்னும் வசனத்தைப்போல, தன்னை போக்குவரத்துக் காவலராகவே நினைத்துக்கொண்டு பல ஆண்டுகளாகவே சாலையைச் சீர்செய்கிறார் விஜயன். அவரது சேவை உள்ளத்தை அறிந்த காக்கிகளும் அவரை ஊக்குவித்துவரும் நிலையில் இந்த கரோனா ஊரடங்கிலும்கூட விஜயனின் சேவை தொடர்கிறது.
144 தடை உத்தரவு, கரோனா அச்சம் இத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போலவே முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோத்து களத்தில் நிற்கிறார் 54 வயதான விஜயன். வேப்பமூடு பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசினேன். “நாகர்கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகராஜபுரம் என்னோட சொந்த ஊரு. எனக்குத் திருமணம் ஆகல. என்கூட பிறந்தவங்க மொத்தம் அஞ்சு பேரு. எல்லாரும் திருமணம் முடிஞ்சு தனித்தனியா போயிட்டாங்க. எங்க அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் செக்யூரிட்டியில் வாட்ச்மேனாக வேலை பார்த்தேன். அவுங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவையே இல்லாத சூழல் உருவாகிடுச்சு. கல்யாணம் ஆகாத ஒத்தக்கட்டைக்கு எதுக்குக் காசு பணம்?” என்று கேட்கிறார் விஜயன்.
தொடர்ந்து அவரே பேசினார். “வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் சேவையாக போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். தினமும் காலையில் 8 மணிக்கு டிராஃபிக்கை க்ளியர் பண்ண வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தைச் சீர் செய்வேன். மறுபடி மாலை அஞ்சு மணிக்கு வந்துட்டு இரவு எட்டுமணி வரை போக்குவரத்தை சீர்செய்வேன். இதுதான் என்னோட அன்றாட வாழ்க்கை. இப்போ ஊரடங்குனால என் டியூட்டி டைம் மாறியிருக்கு” என ஒரிஜினல் போலீஸ் போலவே சொன்னவரிடம், “இப்போ டியூட்டி எப்போ எனக் கேட்டேன். “மதியம் 12 மணிக்கு வந்துட்டு ராத்திரி வரை பார்ப்பேன்.
ஊரடங்குக்கு முன்னாடி வேப்பமூடு, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் மாறி மாறி டியூட்டி பார்ப்பேன். சாலையில் நிற்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி,வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. சில காவலர்கள் வீட்டுக்குப் போகும்போது பத்து, இருபது கொடுத்துட்டும் போவாங்க.
இரவு, நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுலபோய் படுத்துப்பேன். இப்போ டீக்கடைகள் இல்லாததால ஏதாவது தன்னார்வலர்கள் கொடுக்குறதை சாப்பிட்டுப்பேன். சில போலீஸ்காரங்களும் ஒத்தக்கட்டையான மனுஷன்னு வீட்டில் இருந்து எனக்கும் ஏதாச்சும் சாப்பிடக் கொண்டுவந்து கொடுப்பாங்க. செக்யூரிட்டியா இருக்கும்போது வாங்குன காக்கிச் சட்டை, பேன்ட்டை போட்டுட்டுதான் டியூட்டி பார்ப்பேன்.
எங்க ஊர்ல இருந்து டவுனுக்கு நாலு கிலோ மீட்டர். முன்னாடி பஸ்ல ஏறி டியூட்டிக்கு வருவேன். நான் சம்பளம் வாங்காம டியூட்டி பார்க்குறது தெரியுங்குறதால பஸ்ல டிக்கெட் வாங்கமாட்டாங்க. பஸ் ஸ்டாப்ல நின்னா சிலர் பைக்லயும் லிஃப்ட் தந்து கூட்டிட்டுப் போய் விடுவாங்க. ஆனா, இப்போ இது எதுக்குமே வாய்ப்பு இல்லாத நிலையில் பொடிநடையா நடந்தே டியூட்டிக்குப் போயிட்டு இருக்கேன்.
போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும்போது சிலர் மதித்து நடப்பாங்க. சிலரோ வித்யாசமாக பார்த்துட்டு கோமாளின்னு நினைப்பாங்க. யார் எப்படி நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியா இருக்கு. கரோனா சமயத்திலும் பணி செய்வது பெருமையா இருக்கு. எனக்கு போலீஸ்காரங்க கையுறை, மாஸ்க் எல்லாம் கூட கொடுத்துருக்காங்க” என்று படபடவென பேசி முடித்துவிட்டு நம் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் தடுப்புவேலியின் முன்னே போய் நின்றுகொள்கிறார் விஜயன்.