டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைக் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தினகரன்

செய்திப்பிரிவு

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைக் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய் தடுப்பு ஊரடங்கினால் நெல், உளுந்து, பயிறு, காய்கறிகள் உள்ளிட்ட தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கவனிக்க மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பை இருப்பு இல்லை என்பது போன்ற காரணங்களைச் சொல்லி நெல் எடுக்க மறுக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

மேலும், விவசாயிகள் விளைவித்த உளுந்து, பயிறு உள்ளிட்ட தானியங்களையும் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மலைப்பிரதேசங்களில் உள்ள காய்கறி விவசாயிகளின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. கேரட் உள்ளிட்ட காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் கால்நடைகளுக்குக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. தாங்கள் விளைவித்த பொருட்களை வாங்க ஆளின்றி வீணாகப் போனால், ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள், மீண்டும் எப்படி விளைவிக்க முன் வருவார்கள்?

இந்த நிலை தொடராமல் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மாவட்ட வாரியாக விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான பணியை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளோடு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

அதன் மூலம், உண்மையான கள நிலவரத்தை அறிந்து, புதிதாக விளைவிப்பதற்கான விதைகள், உரம் உள்ளிட்டவை தடங்கலின்றி விவசாயிகளுக்குக் கிடைப்பதற்கும், உற்பத்தியாவதை சரியான விலையில் விற்பதற்குமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்னும் சில நாட்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கே கையிருப்பு இருப்பதாக வணிகர் அமைப்பினர் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, இப்போது பிஸ்கட், பிரெட் போன்ற பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாதவாறு முன்கூட்டியே அந்தப் பொருட்களை உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT