40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரணத் திட்டம் வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடனுதவி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.

கரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால் இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் அமைப்பு சார்ந்தவர்கள்; மீதமுள்ள 90% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பதிலிருந்தே கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வில் எத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

உலக அளவில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் ஐந்தில் நான்கு பங்கினர், அதாவது 81 விழுக்காட்டினர் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவார்கள் என பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பு (ILO) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளில்தான் ஊரடங்கால் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ள பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு, இந்தியாவில் மட்டும் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதேநிலை, இந்த ஆண்டு முழுவதும் நீட்டிக்கக்கூடும் என்றும், 2020-ம் ஆண்டின் இறுதியில் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியப் பொருளாதாரத்தின் மீதும், வேலைவாய்ப்பின் மீதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசும் உணர்ந்திருந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரையில் இல்லாத அளவுக்கு இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய அரசு உள்ளிட்ட எந்த நாட்டு அரசும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்தால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது மட்டுமின்றி, இந்தியப் பொருளாதாரமும் உடனடியாக சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பின்னடைவுகளை சந்திக்கும்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பரவலை தடுப்பதும், முற்றிலுமாக ஒழிப்பதும்தான் உலக நாடுகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அக்கடமையை இந்திய அரசும், தமிழக அரசும் நன்றாகவே செய்து வருகின்றன.

அத்துடன் நிவாரண உதவி, பொருளாதார புத்துயிரூட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் மட்டும்தான் வறுமை மற்றும் பட்டினியைப் போக்க முடியும். அதற்காக, முதற்கட்டமாக பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அடுத்தகட்டமாக அமைப்பு சாரா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்குவதன் மூலம், அத்துறையை பழைய நிலைக்கு திருப்பி, அதன் மூலம் வேலையிழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்தல் ஆகிய 2 கட்ட நடவடிக்கை மூலம்தான் இந்தியப் பொருளாதாரத்தில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க முடியும்.

கரோனா வைரஸ் அச்சம் பரவத் தொடங்கிய சில நாட்களிலேயே, அதாவது மார்ச் 26-ம் தேதி அடித்தட்டு மக்களுக்கு அரிசி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவித்தது. கரோனா வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணக்கிடுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த நிவாரண உதவிகள் போதுமானவையாக இருக்காது.

வேலை இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் தான் இந்த உதவிகள் கிடைக்கும். பிற தொழிலாளர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்காது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்கள்.

வேலை இழந்த ஒரு சில நாட்களிலேயே அவர்களின் சேமிப்புகள் கரைந்திருக்கும் என்பதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியில் வாடிக்கொண்டிருக்கக்கூடும். அவர்களின் பசியைப் போக்கும் வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நிவாரண உதவித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

அடுத்தகட்டமாக அமைப்பு சாரா தொழில்களுக்குப் புத்துயிரூட்டுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழில்கள் ஏராளமாக இருந்தாலும் கூட, அவற்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் மிகவும் முக்கியமானவையாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 3 லட்சம் கோடி அமெரிச்க்க டாலர் என்றால், அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்களிப்பு நான்கில் ஒரு பங்கு, அதாவது ரூ.55 லட்சம் கோடி ஆகும்.

அதுமட்டுமின்றி, 50 கோடி தொழிலாளர்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்தத் துறைக்கு புத்துயிரூட்டினாலே இந்தியப் பொருளாதாரம் புத்தெழுச்சி பெறும் என்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடனுதவி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஒருபுறம் கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளையும், மறுபுறம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கரோனா வைரஸ் நோயால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் முழுமையாகப் போக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்