ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்; 9 யோசனைகளை முன்வைத்து பிரதமருக்கு அன்புமணி கடிதம்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு நீட்டிப்பு, நிவாரண உதவித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.8) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"வரலாறு காணாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் உங்களின் துணிச்சலான தலைமைப் பண்புகளுக்கும், வலிமையான நடவடிக்கைகளுக்கும் இந்தத் தருணத்தில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தவாறு, நான் உங்களிடம் முன்வைக்க விரும்பும் சில யோசனைகள் பின்வருமாறு:

1. தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக இரு வாரங்களுக்கும், அதன்பின் கூடுதலாக ஒரு வாரத்திற்கும் நீட்டித்தல் அல்லது கரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்படுதல், இவற்றில் எது குறைந்த காலமோ, அந்தக் காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.

கரோனா நோய் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, இந்த நோய்ப்பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

2. நமது தாய்நாட்டை ராணுவத்தினர் காப்பாற்றுவதைப் போன்று, கரோனா நோய் பாதிப்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ நலப் பணியாளர்கள்தான் நம்மைக் காக்கின்றனர். தாங்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.

3. ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான். அவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாலும், சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாமலும் உள்ளனர். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த நெருக்கடி தீர்ந்த பிறகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி பிரதமரால் வழங்கப்பட வேண்டும்.

உணவு தானியங்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றைப் போக்கும் வகையில், தேவையான தருணங்களில் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும்.

4. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதாந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

5. மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், உள்விளையாட்டு அரங்கங்களில் தங்க வைக்கப்பட வேண்டும்; அவர்களுக்குத் தேவையான உணவு, சுகாதார, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

6. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மற்ற நோயாளிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் பொது மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதற்குப் பதிலாக, கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

7. அனைத்து வகை வங்கிகளிடமிருந்தும் பெறப்பட்ட கடன்களுக்கான 3 மாதத் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகையை அசலுடன் சேர்த்து அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ள நிலையில், அத்தொகைக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்.

8. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறேன்.

சீனா பாரம்பரிய சீன மருத்துவ முறையையும், நவீன மருத்துவத்தையும் இணைத்துப் பயன்படுத்தி கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது. நாமும் இந்த நெருக்கடி காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்துவ முறையைப் பயன்படுத்தலாம்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் நோய் தீர்க்கும் திறன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. கரோனா வைரஸ் கடந்த 17 ஆண்டுகளில் 3 முறை அதாவது, 2003-ல் சார்ஸ், 2012-ல் மெர்ஸ், 2019-ல் கரோனா வைரஸ் ஆக மரபணு மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றம் ஆகும்.

காலநிலை மாற்றம் காரணமாக எபோலா வைரஸ், நிபா வைரஸ் ஆகியவற்றுடன் கரோனாவும் சேர்ந்து மரபணு மாற்றம் பெற்று மோசமான வைரஸ் நோயாக உருவெடுக்கக்கூடும். இவ்வாறான புதிய நோய் உருவாவதைத் தடுக்க காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 2015 ஆம் ஆண்டின் காலநிலை மாற்றத்திற்கான ஐநா உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தன்மையை தாங்கிக் கொள்ளுதல், பாதிப்புகளைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், காலநிலை மாற்றத்தின் விளைவான கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா உலக நாடுகளை வழிநடத்த வேண்டும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நான் முன்வைக்கும் சில யோசனைகள் இவை தான். இவை உதவியாக இருக்கும்.

கரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்