தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு- தனியார் மருத்துவமனை மூடல்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனை பணியாளர் குடும்பத்தினர் 3 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அந்த தனியார் மருத்துவமனை அதிகாரிகளால் மூடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்காணிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு உள்ளது. இதுதவிர, 2 தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா அறிகுறி இருந்ததாக இதுவரை 70-க்கும் அதிகமானோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய செய்துங்கநல்லூா் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, பேட்மாநகரத்தைச் சேர்ந்த தந்தை - மகன், ஹேம்லாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இருவர், தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 6 பேர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையின் பெண் வேப் டெக்னீசியன், அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பேட்மாநகரத்தைச் சேர்ந்த இருவர், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு நிலவரப்படி கரோனா சிறப்பு வார்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ள 10 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இற்நிலையில் தூத்துக்குடியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை நேற்று இரவு மூடப்பட்டது.

அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரை அவரது வீட்டில் தனிமைப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள், வீட்டின் முன் அதற்கான அடையாள வில்லையை ஒட்டினர் .

மேலும் மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றிய 8 பணியாளர்கள் தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லுரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்க்ப்பட்டுள்ளனர். தலைமை மருத்துவர் மற்றும் 8 பணியாளர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு, மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் உடனடியாக அவசர சிகிச்சை வாகனம் மூலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். மேலும், மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், பணியாளர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்குள் வெளியாள்கள் செல்லாதவாறு மூடப்பட்டது. மருத்துவமனையில் நுழைவு வாயிலில் காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுதவிர, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் கடந்த சில நாள்களாக எங்கெங்கு சென்றனர், யாரை சந்தித்தனர் என்ற விவரத்தையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்