மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க முன்வர வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.8) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி என்னவெனில், வரும் 14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்படுமா? விலக்கிக் கொள்ளப்படுமா? என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை விட, எல்லோரையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகும்.

கரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் பாமகவின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்தபோது, அப்படி ஒரு யோசனையை பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கக்கூட இல்லை.

அப்படி ஒரு நடவடிக்கைக்கு தமிழக அரசு கூட தயாராக இருக்கவில்லை. தமிழக அரசின் சார்பில் ஒரு வாரத்திற்கு மட்டும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பித்து பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டார்.

இந்தியாவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் ஆகும் நிலையில், அதனால் ஏற்பட்ட பயன் என்ன? என்ற கேள்விக்கு ஓர் ஒப்பீட்டைச் சுட்டிக்காட்டுவதுதான் சரியான பதிலாக இருக்கும். மார்ச் ஒன்றாம் தேதியன்று அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆகும். அதேநாளில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆகும்.

அதன்பின்னர் இந்தியாவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் பயனாக நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 5,144 மட்டும் தான். ஆனால், அமெரிக்காவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 788 ஆகும்.

ஊரடங்கு ஆணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அமெரிக்காவை விட இந்தியாவின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா பாதித்த நோயாளிகளால் நிரம்பியிருக்கும். அனைத்துத் தெருக்களிலும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்திருக்கும். அப்படி ஒரு அவல நிலை ஏற்படாமல் தடுக்கப்பட்டதற்கு காரணம் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதுதான்.

அதேநேரத்தில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. அதற்கான போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற அடுத்த சில வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியம்.

எத்தனை வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை அடுத்த சில நாட்களில் கரோனா பரவலின் வேகம் எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைப் பொறுத்துதான் தீர்மானிக்க முடியும். ஆனால், கரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும்; ஏராளமானோர் வேலை இழப்பர்; அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்று ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் குரல்கள் கேட்காமல் இல்லை. அந்த ஐயங்கள் அனைத்தும் உண்மைதான்.

அதுமட்டுமல்ல, கடந்த ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயில் பங்கு, மது விற்பனை, எரிபொருள் விற்பனை, பத்திரப்பதிவு, மோட்டார் வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் தமிழக அரசின் சொந்த வரி வருவாயாக மட்டும் சராசரியாக ரூ.11 ஆயிரத்து 127.50 கோடி கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு கூட அரசுக்குக் கிடைத்திருக்காது என்பதையும் நான் அறிவேன். இந்த இழப்புகளை எல்லாம் பின்னாளில் சரி செய்து கொள்ளலாம்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும், வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வாழ்வாதார உதவிகளை வழங்கலாம்.

ஆனால், கரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதனால்தான் ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது.

கரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

இவற்றில் மகாராஷ்டிராவைத் தவிர மற்ற 6 மாநிலங்களை விட தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராதான் 1,018 பேருடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 690 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

4 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலமும், 10 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரும், 26 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட அசாமும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதிலிருந்தே, அம்மாநிலங்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, ஒரு மனிதருக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்பட்டு, அவர் ஊரடங்கை மதிக்காமல் வலம் வந்தால், அவரிடமிருந்து மட்டும் ஒரு மாதத்தில் 406 பேருக்கு நோய்த் தொற்றும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடினால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இதுவே கரோனாவின் சமூகப் பரவலுக்கு வழிவகுக்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக ஊரடங்கு ஆணையைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆணை குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருக்கிறார். இந்த நிலைப்பாடு நியாயமானதுதான்.

ஆனாலும், தமிழ்நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் ஒரு படி மேலே போய் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் கூட, தமிழ்நாட்டில் கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்