கரோனா ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.8) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு நடைமுறை, தீவிர சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகளைச் சமாளிக்கவும் போராட வேண்டியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக மன அழுத்தம் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால், அதைப் போக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.
கரோனா வைரஸ் நோய்ப் பரவல் குறித்த அச்சத்தாலும், நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக ஊரடங்கு ஆணை நடைமுறையில் இருப்பதாலும் மக்களின் வாழ்க்கைச் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்திய மக்களின், குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை மேலை நாடுகளின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது ஆகும். மேலை நாட்டு மக்கள் தனித்து வாழப் பழகியவர்கள்.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் சமூக மயமாக்கப்பட்டவர்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த நல்லவை மற்றும் கெட்டவையைக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவும், துக்கங்களைப் பாதியாக்கிக் கொள்ளவும் தெரிந்தவர்கள் தமிழக மக்கள். அதனால் தான் அவர்களின் வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாக இருக்கிறது.
» எம்.பி.க்களின் ஊதியம் பிடித்தம் மிகச்சரியான முடிவு; அரசியலாக்கக் கூடாது; வாசன்
» 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திடுக; தினகரன்
ஆனால், கரோனா வைரஸ் அச்சமும், ஊரடங்கு ஆணையும் மக்களின் நிம்மதியையும், சமூக மயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையையும் பறித்திருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக நகர்ப்புற மக்கள் அண்டை வீட்டாருடன் பேசுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, வழக்கமாக கணவரை அலுவலகத்துக்கும், குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பிய பிறகு குடும்பத் தலைவிகள் சிறிது நேரம் ஓய்வெடுப்பார்கள்; பணிக்குச் செல்லும் குடும்பத்தலைவிகளாக இருந்தால் அலுவலகத்துக்குச் செல்வார்கள்.
ஆனால், ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் வீட்டுப் பணிகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு பொழுதுபோக்கு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. இவை அனைத்தும் சேர்ந்து கொண்டு பெண்களுக்கு மிகக்கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
அலுவலகம், கல்விக்கூடம் என்று தினமும் வெளியில் சென்று வரும் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் கடந்த இரு வாரங்களாக வீடுகளுக்குள் அடைந்து கிடப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேநேரத்தில் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக நடத்தப்படும் போரில், இத்தகைய பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதவை.
அவற்றைச் சமாளிப்பதற்கு ஏற்றவாறு நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
வீட்டில் இருக்கும் நேரத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைகள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்துப் பணிகளையும் அவர்களே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு பதிலாக, அவர்களின் பணிச்சுமையை குடும்பத் தலைவர்களும் பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் இருவரின் மன அழுத்தமும் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். அவற்றுடன் உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றை செய்வது உடல்நலனுக்கு மட்டுமின்றி, மனநலத்துக்கும், மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.
மக்களின் மன அழுத்தத்தைப் போக்குவதில் தனிநபர் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அரசின் சார்பிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தனிநபர்கள் அவர்களின் முயற்சியில் மேற்கொள்ளும் பணிகளால் கிடைக்கும் தீர்வை விட, 10 மடங்குக்கும் கூடுதலாகப் பயனளிக்கக்கூடிய தீர்வுகளை மனநல மருத்துவர்களாலும், உளவியல் வல்லுநர்களாலும் வழங்க முடியும்.
தமிழகத்தின் தலைசிறந்த மனநல மருத்துவர்கள், உளவியல் வல்லுநர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமாக தமிழக மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை அரசு, பண்பலை மற்றும் தனியார் வானொலிகள் மூலமாகவும், அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் தொடர்ந்து தினமும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்நிகழ்ச்சிகள் சொற்பொழிவு வடிவிலும், மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விடையளிக்கும் வடிவிலும் அமைய வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பும் எதிர்கொண்டு வரும் மன அழுத்தம் போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு பக்குவமாகக் கையாண்டு வருகிறது. அத்துடன் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும், மக்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கரோனா சிக்கலுக்கு அரசு முழுமையான தீர்வு காண வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago