கரோனா சோகங்கள் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சிலர் காமெடி அவதாரம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த ரூட்டில், கொத்துக் கொத்தாக உயிர்ப் பலியைத் தடுக்க கரோனா வைரஸின் பெயரை மாற்றுவதுதான் ஒரே வழி என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீ.
"யாருப்பா அந்த ஸ்ரீ?" என்று கேட்பவர்களுக்காக ஒரு சின்ன ஃபிளாஷ்பேக். 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம். "சிவகாசியோட நியூமராலஜி கூட்டுத்தொகை 18 ஆக இருக்குது. ஸ்ரீலங்கா, காஷ்மீர், மும்பை மாதிரியே சிவகாசிக்கும் 18 வர்றதாலதான், அந்த ஊர்களில் குண்டுவெடிப்பதைப் போலவே, சிவகாசியும் அடிக்கடி பட்டாசு விபத்து ஏற்பட்டு பல பேரைக் கொல்லுது. இதுக்கு ஒரே தீர்வு SIVAKASI-ங்கிற பேரை SIVAKAASI-ன்னு மாத்தணும்" என்று சிபாரிசு செய்தவர். இவரது பரிந்துரையை அப்படியே சிவகாசி நகராட்சி தீர்மானமாக நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்த வரலாற்று(!) நிகழ்வும் நடந்தது.
காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்றால், தமிழ்நாட்டை ‘தமிழ் ஸ்டேட்’ என்று பெயர் மாற்றச்சொல்லி அன்றைய முதல்வர் கருணாநிதிக்கே கடிதம் போட்டவர். இவ்வளவும் செய்தவர் இப்போது மட்டும் சும்மா இருப்பாரா? பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஜோதிடர் ஸ்ரீ என்ன எழுதியிருக்கிறார் என்று சொன்னால் சிரியாய்ச் சிரிப்பீர்கள். அதற்கு முன்னதாக இன்னொரு ஃபிளாஷ்பேக்.
27.3.2014 அன்று சிவகாசியில் ஒரு பிரஸ் மீட். "நாஸ்டர்டாம் சொன்ன 'சைரன்', இஸ்லாமிய நூல் பிஹாருல் அன்வார் சொன்ன 'மஹதி', பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட 'மனித குமாரர்', இந்து மத புராணங்கள் சொன்ன 'கல்கி அவதாரம்' தென்னிந்தியாவில், சிவகாசியில் அவதாரம் எடுத்துவிட்டார். அது நான் தான்" என்று சொல்லி, நிருபர்களைத் தலைதெறிக்க ஓட விட்டவர் நம்ம ஸ்ரீ. பிரஸ் மீட்டுக்கு 18 பத்திரிகையாளர்கள் வந்திருந்தும் கூட, அந்தச் செய்தி எந்தப் பத்திரிகையிலும் வெளிவராமல் போனதற்கு அயல்நாட்டு சதிதான் காரணம் என்று இன்னமும் புலம்பிக் கொண்டிருப்பவர்.
» சென்னை அருகே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பார்வையற்றவர்கள்: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
» கரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா; கூடுதல் எச்சரிக்கை தேவை; அன்புமணி
அவர் தான் இப்போது தன் பக்தர் ஒருவர் மூலம், பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், "பாரதப் பிரதமர் மோடிஜியின் கவனத்திற்கு, அவசர, அவசிய செய்தி! கரோனா என்னும் கொடிய விஷக் கிருமியை உலகம் முற்றிலும் ஒழிப்பதற்கு மகா விஷ்ணுவின் கலியுக அவதாரமான தெய்வீக மகாகுரு ஸ்ரீ சுவாமிகள் (கல்கி அவதாரம்) இறை நிலையில் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடிஜியை நேரில் சந்திக்க விரும்புகிறார். அழைக்கின்றார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லவும், தீர்வு செய்யவும் தயாராக இருக்கிறார். மோடிஜி இந்த தெய்வீக மகா குருவை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கும்படி உலக மக்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு, ஏ.எஸ்.எஸ்.ஸ்ரீராஜராஜேஸ்வரி (ஜோதிடரின் மனைவி), சிவகாசி".
இப்படிப் போகிறது கடிதம். இதன் நகலை தமிழக முதல்வருக்கும், விருதுநகர் கலெக்டருக்கும் கூட அனுப்பியிருக்கிறார்கள்.
"தீர்வை பிரதமரிடம்தான் சொல்ல வேண்டுமா? பத்திரிகையாளரான என்னிடம் சொன்னால் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் அதை வெளியிடுவோமே?" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். ரொம்ப நேரம் பிகு செய்தவர், அந்த சூட்சுமத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"அதாவது தம்பி... ஆங்கில உச்சரிப்புப்படி இப்ப எல்லாருமே ‘கொரானா’ன்னு தான் எழுதுறாங்க, சொல்றாங்க. எண்கணிதப்படி இதோட (CORONA) கூட்டு எண் 7. உயிர் பலியும், கட்டுக்கு அடங்காத நிலையையும் கொடுக்கும் என்பதே அதன் பலனாகும்.
அதுவே, கரோனா ( KOROONAA) என்று எழுதினால் கூட்டு எண் 5 வரும். சாந்த நிலையை, உயிர் பலி இல்லாத நிலையை உருவாக்கும் என்பதே இதன் பலன். எனவே, இந்தியாவில் அதன் பெயரை கரோனா என்று மாற்றி, அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வேண்டும். 130 கோடி மக்களும் புதிய பெயரை உச்சரித்து, கோடிக்கணக்கான பத்திரிகை பிரதிகளிலும் அந்தப் பெயர் அச்சிடப்படும்போது அதன் பலனை நாம் கண்கூடாகப் பார்ப்போம். கரோனாவின் ரத்த வெறியும் அடங்கி, பரமசாதுவாகிவிடும்.
கூடவே, நாட்டு மக்களை எல்லாம் பொது இடங்களில் திரட்டி ஒரு கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். அப்படிச் செய்தால், இந்தியாவில் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் இருந்தே கரோனாவை ஒழித்துவிடலாம். இதைத்தான் பிரதமரிடம் சொல்லப் போகிறேன்" என்றார்.
நேரங்காலம் தெரியாம எப்டி எப்டியெல்லாம் கௌம்பி வர்றாங்க பாருங்க!
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago