விரைவில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்; ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பின் பரிசோதனை அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஊரடங்குக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள், துறைச் செயலர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

“சென்னையில் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் வீட்டுத் தனிமையில் இருந்த 10 ஆயிரம் பேரின் கண்காணிப்புக் காலம் முடிவடைந்தது. இது பெரிய நோய். இதைக் கட்டுக்குள் வைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் கரோனா நோய் அதிகரித்து வருகிறது. மக்களைத் துன்புறுத்தி சட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம். ஒவ்வொருவரும் அவர்களது கடமையை உணர்ந்து நடக்க வேண்டும்.

அரசு சட்டம் பிறப்பித்தாலும் அதைக் கடைப்பிடிப்பது மக்களின் கையில்தான் உள்ளது. அதேபோன்று காவல்துறையும் மனிதர்கள்தான். 24 மணிநேரமும் அவர்களும் மக்களுக்காகத்தான் பணியாற்றுகிறார்கள். அதை பொதுமக்கள் உணர்ந்து தங்களைத் தாங்களே சுயக் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும்.

தமிழகத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. மேலும், 21 இடங்களில் ஆய்வகம் அமைக்க அனுமதி கோரியுள்ளோம். 3,371 வென்டிலேட்டர் கருவிகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க உள்ளோம். சீனாவிலிருந்து விரைவில் வர உள்ளன. அவை வந்தபின் முடிவெடுக்கப்படும். வரும் 9-ம் தேதி முதல் வேகமாக ஆய்வு செய்ய உள்ளோம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பின்னர் அறிவிப்போம். 21 நாட்கள் நோயின் வீரியத்தைப் பொறுத்து அடுத்து முடிவெடுப்போம். இந்த நோய் திடீரென்று வரவில்லை. அந்த அளவுக்கு உருவாக்கிவிட்டார்கள். இன்று 90 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். அவர்களுக்கு கூடியவரை வீடுகளில் ரேஷன் பொருட்கள், காய்கறிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

வீடுகளுக்கே சென்று உணவு வழங்குவது தவிர அந்தந்தப் பகுதிகளில் 2 கிலோ மீட்டருக்குள் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கிறோம். சென்னையிலும் நடமாடும் காய்கறிக் கடைகள் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கை மாறி மாறி வருவதற்குக் காரணம், இப்போதைக்கு சரியான எண்ணிக்கை சொல்ல முடியாது. யாரும் எதையும் சொல்ல முடியாது. மாநாட்டுக்குப் போனது யார் யார் என வந்தவர்களை வைத்து பரிசோதனை செய்கிறோம்.

டெல்லி சென்று வந்தவர்கள் தானாக முன்வந்து தகவல் சொல்ல வேண்டும் என நானும் சுகாதாரத்துறைச் செயலரும் கோரிக்கை வைத்தோம். அவர்களில் வந்தவர்களுக்கு சோதனை நடத்தியதில் பலருக்கு பாசிட்டிவ், பலருக்கு நெகட்டிவ். இதில் நோய் வருவது தவறில்லை. ஆனால் சிகிச்சைக்கு வராமல் இருந்தால் அவர்களுக்குத்தான் பாதிப்பு. நாம் நன்றாக இருந்தால்தான் நம் குடும்பத்தைப் பார்க்க முடியும். ஆகவே உங்களைக் காக்க, உங்கள் குடும்பத்தைக் காக்க சமூகத்தைக் காக்க சிகிச்சைக்காக வாருங்கள்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தொழிலாளர்கள் சம்பந்தமான ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல மாநிலங்களில் அவ்வாறு உதவி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சம் சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளன. அவர்கள் அரிசி குடும்ப அட்டையாக மாற்றக் கோரிக்கை வைத்தனர். மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்தோம். 5,51,000 பேர் மாற்றிக்கொண்டனர். மீதமுள்ளவர்கள் மாற்றவில்லை. நாங்கள் அரிசி குடும்ப அட்டைக்குத்தான் 1000 ரூபாய் வழங்குகிறோம்.

கரோனா தொற்று குறித்து மிகப்பெரிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த பாடத்தை வைத்து நாம் நடந்துகொள்ள வேண்டும். இது அவசர நிலை காலம். இன்றைக்கு அரசுக்கு வருகின்ற வருவாய் குறைந்துபோய் உள்ளது. அரசுக்கு வருகின்ற நிதியை வைத்துதான் செயல்பட வேண்டியுள்ளது.

பல துறைகள் மிகுந்த நஷ்டத்தில் இயங்குகின்றன. அதையெல்லாம் சமாளித்துதான் இந்த பேரிடர் பணியைச் செய்து வருகிறோம். அதனால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளோம்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்