இந்தியாவில் கரோனா தொற்று இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமான தகவலை உணர்ந்து இளைஞர்கள் இனியாவது அரசு உத்தரவை மதித்து வீடடங்குகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயதுப் பிரிவு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. கரோனா வைரஸ் தங்களையெல்லாம் தாக்காது என்று யாரும் அசட்டுத் துணிச்சலுடன் இருக்க முடியாது.; கரோனா வைரசின் தாக்குதல் எல்லைக்கு அப்பால் எவரும் இல்லை என்பதைத் தான் அவை உணர்த்துகின்றன.
கரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் தான் அதிகம் தாக்கும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், அது தவறு என்பதை இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன. இந்தியாவில் கரோனா வைரசால் மிகக்குறைந்த தாக்குதலுக்கு ஆளானவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 வயதுக்கும் கீழுள்ள பிரிவினர் தான்.
ஒட்டு மொத்தமாக தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இப்பிரிவினரின் விழுக்காடு வெறும் 9 மட்டுமே. நேற்றிரவு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களான 3,630 பேரில் இவர்களின் எண்ணிக்கை 324 மட்டும் தான். அதேபோல், 60 வயதைக் கடந்த முதியவர்களின் அளவு 17 விழுக்காடு, அதாவது 612 பேர் மட்டுமே என அரசு கூறுகிறது. ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கைகள் மிகவும் குறைவாகும்.
அதேநேரத்தில் உடல் வலிமை மிக்கவர்கள், மிகவும் ஆரோக்கியமான வயதுப் பிரிவினர் என்று நம்பப்பட்டு வந்த 21 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் தான் கரோனா வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகியிருக்கின்றனர்.
அவர்களின் எண்ணிக்கை 1512 ஆகும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது 42% ஆகும். அதேபோல், 41 முதல் 60 வயது பிரிவினரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33%, அதாவது 1188 பேர் ஆவர். இப்புள்ளி விவரம் மிகச்சரியான நேரத்தில் தான் வெளியாகியிருக்கிறது. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவும்.
இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதை உறுதி செய்வதைப் போலத் தான் ஏராளமான இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை கொஞ்சமும் மதிக்காமல், கரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு ஆணை நடைமுறைக்கு வந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில், சாலைகளில் இரு சக்கர ஊர்திகளில் பறப்பவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கும் போதிலும், இப்போதும் விதிகளை மீறுபவர்களில் 99 விழுக்காட்டினர் 21 முதல் 40 வயது பிரிவினர் தான் என்பதை காவல்துறையினரின் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கும்.
இதற்கு காரணம்... நம்மையெல்லாம் கரோனா வைரஸ் தாக்காது என்ற அந்த வயதுப் பிரிவினரின் அதீத நம்பிக்கை தான். ஆனால், அந்த நம்பிக்கை மூட நம்பிக்கை என்பதை மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன.
கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்திலேயே, ‘‘இளைஞர்கள் கரோனாவால் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல. அந்த வைரஸ் உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் தள்ளக்கூடும்; ஏன் கொல்லவும் கூடும்’’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை செயலர் மருத்துவர் டெட்ராஸ் கூறியதை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி அறிவுறுத்தியிருந்தது. அது இப்போது உறுதியாகியுள்ளது.
மீண்டும், மீண்டும் இளைஞர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் நடமாடுவதன் மூலம் கரோனா தொற்றுக்கு ஆளாகி விடாதீர்கள் என்பதைத் தான். குழந்தைகளையும், முதியவர்களையும் விட கரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து இளைஞர்களுக்குத் தான் மிக அதிகமாக உள்ளது என்பதால் உயிரோடும், நோயோடும் அவர்கள் விளையாடக்கூடாது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நாளான ஜனவரி 30-ஆம் தேதிக்குப் பிறகு 59 நாட்கள் கழித்து மார்ச் 28-ஆம் தேதி தான் கரோனா பாதிப்பு 1000-ஐத் தொட்டது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் 2,600 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் முதல் தொற்று ஏற்பட்ட மார்ச் 7-ஆம் தேதி முதல் மார்ச் 30 வரையிலான 24 நாட்களில் தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மட்டும் தான். ஆனால், அடுத்த 5 நாட்களில் மட்டும் 418 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே தமிழகம் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணரலாம். இத்தகைய சூழலில் சாகசம் என்பது தற்கொலைக்கு சமமாகும்.
எனவே, தமிழகத்தில் நிலவும் சூழலை உணர்ந்தும், இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் இளைஞர்கள் இரு சக்கர ஊர்திகளில் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago