கரோனா: தமிழகத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.4) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா தடுப்புப் பணிகள் மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு சேர்ந்திருக்கும் நிலையில், அதற்காக மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மிகவும் தாமதமாகத்தான் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவிலேயே கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல், ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் கரோனா பரவலைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை அதிக எண்ணிக்கையிலானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் பணிகளுக்காக ஏராளமான மருத்துவக் கருவிகளும், மருந்துகளும் வாங்க வேண்டியுள்ளன. அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி தமிழக அரசுக்கு தேவைப்படுகிறது.

கரோனா மருத்துவத் தேவைகளுக்காக பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.3 கோடி ஒதுக்கிய நிலையில், அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நிதி ஒதுக்கினர். ஆனால், அதற்குப் பிறகும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.3,000 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கிறது.

மற்றொரு புறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3,280 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மார்ச் 31 ஆம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்பை ஈடுகட்டுவதற்கான முதல்கட்ட உதவிகள் தான் எனும் நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்புக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

அதற்காகவும், பிற தேவைகளுக்காகவும் மத்திய அரசின் உதவியாக ரூ.4,000 கோடியும், சிறப்பு மானியமாக ரூ.9,000 கோடியும் வழங்கும்படி பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை தமிழக அரசுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு மாநில அரசுக்கும் மத்திய அரசின் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை.

கரோனா நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். அதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அடித்தட்டு மக்களால் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது.

அவர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை மாநில அரசு வழங்கும் நிலையில், அதற்கான செலவுகளில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல், மது வகைகள் ஆகியவற்றின் மீதான மதிப்புகூட்டு வரி வருவாய் நேரடியாக தமிழக அரசுக்குக் கிடைக்கும் என்றாலும் கூட, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் பத்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழகத்திற்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிலுவை வழங்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசின் நிதி உதவிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் தமிழக அரசின் கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். அது தமிழகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசு கோரியவாறு ரூ.16 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்பணம் ஆகியவற்றையும் மத்திய அரசு விரைவாக வழங்க முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்