டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மேட்டுப்பாளையத்தில் 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று: 80 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

கோவை மேட்டுப்பாளையத்தில் 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 80 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பினர். இவர்களில் 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், இந்துஸ்தான் மருத்துவமனைக்கு 20 பேரும் மாற்றப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் 22 ஆயிரம் வீடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த் தடுப்பு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் சாலை தடுப்புகளை வைத்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் தீயணைப்புத் துறை உதவியுடன், கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE