ஊரடங்கைப் பயன்படுத்தி தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.3) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் கடந்த மார்ச் 24 முதல் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை அனைவரும் மனதார வரவேற்றனர்.
கடந்த 2016 இல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும், பூரண மதுவிலக்கு தமது நோக்கம் என்று கூறி முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும் பிப்ரவரி 2017 இல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற ஆணையைப் பிறப்பித்தார்.
இத்தகைய அறிவிப்புகள் வருவதற்கு பல்வேறு போராட்டங்களை ஜூலை 2015 இல் நிகழ்த்தி தமது உயிரை மாய்த்துக்கொண்ட காந்தியவாதி சசிபெருமாள்தான் காரணம் என்பதை இங்கு நினைவு கூர வேண்டும். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு காப்பாற்றவில்லை. அதற்கு மாறாக மது விற்பனையைப் பெருக்குவதில் தான் கவனம் செலுத்தியது.
தமிழகத்தில் மே 2018 இல் 3,866 டாஸ்மாக் கடைகள்தான் இருந்தன. அது மே 2019 இல் 5,152 டாஸ்மாக் கடைகளாகப் பெருகியதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம். இதன் மூலம் ஜெயலலிதா விரும்பிய பூரண மதுவிலக்குக் கொள்கையை எடப்பாடி பழனிசாமி அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை 'அம்மாவின் ஆட்சி' என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
நீண்டகாலமாக தமிழக மக்களில் ஒருகோடி பேருக்கு மேல் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அவர்களால் மது குடிக்காமல் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மக்கள் ஊரடங்கு அறிவித்தது முதல் மது குடிக்கு அடிமையானவர்கள் மதுவைத் தேடி அலைகிறார்கள்.
இதை சாதகமாகப் பயன்படுத்தி தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மது பாட்டில்கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இதற்கு காவல்துறையினர் துணை போவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
வேலூர் அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபோல வேலூர் நகரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக கைது நடவடிக்கைகள் இருந்தாலும் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசைக் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
அதிமுக ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்குமேயானால் ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் விருப்பம் இருந்தால் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிக்கிற பழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி குடிக்கு அடிமையானவர்களுக்கு கேரள அரசு தொடங்கியிருப்பதைப் போல, தமிழகத்தின் பல பகுதிகளில் மறுவாழ்வு மையங்களை உடனடியாக தமிழக அரசு தொடங்கவேண்டும்.
மதுவுக்கு அடிமையான தமிழ் மக்களின் மனிதவளம் பாழாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ச் சமுதாயத்தின் மிகப்பெரிய நோயாக அவர்கள் விளங்கி வருகிறார்கள். மது குடியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் சோகக்கதையை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் இத்தகைய மது குடியர்களால் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
ஒரு பக்கம் மக்கள் நலன் சார்ந்த இலவசத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் மது குடியர்களால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.33 ஆயிரம் கோடி வருமானத்தைப் பெறுகிறது. அதிமுக அரசு உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்குமானால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருமானத்தைக் குறைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
இதற்கு மக்கள் ஊரடங்கு காலமான 21 நாட்கள் அரிய வாய்ப்பாகும். இதை அதிமுக அரசு சரியாகப் பயன்படுத்த வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago