காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம், ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.3) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தடுப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், அரசு செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் காட்டும் தன்னலமற்ற ஈடுபாடும், தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணி செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத்தக்கவை. அதேபோல், அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் காட்டும் தியாக உணர்வும் உன்னதமானவை.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி எப்போதுமே உயிர்களைக் காப்பாற்றுவதுதான். உயிர்களைக் காப்பாற்றுவது அவர்களின் வழக்கமான கடமைதான் என்றாலும் கூட, இப்போது கரோனா என்ற கொடிய வைரஸிடமிருந்து உயிர்களைக் காப்பது சவால் நிறைந்த போராக மாறியிருக்கிறது.
உலகின் பல நாடுகளில் மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தங்களின் உயிர்களை தியாகம் செய்யும் வரலாறு இன்னும் தொடர்கிறது.
தமிழகத்திலும் அத்தகைய தியாகத்திற்கு தயாராகத்தான் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தன்னலமற்ற பணியையும், தியாக உணர்வையும் போற்றும் வகையில் தான் அவர்களுக்கு காப்பீடும், சிறப்பு ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது.
அதையேற்று மத்திய அரசு அவர்களுக்கு காப்பீடு வழங்கியது. தமிழக அரசும் அதன் பங்குக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருமாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இத்தகைய பணி அங்கீகாரமும், சிறப்பு ஊதியமும் இன்னும் பல பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் காவல்துறையினர் ஆவர். கரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகின்றனர்.
» வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வாசன்
» புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிக்கு வராத 54 ஊழியர்கள் பணி நீக்கம்
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகத் தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை புரிந்தும் கூட, சட்டத்தை மீறி சாகசம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் சாலைகளில் வலம் வந்து, கரோனாவை வரவேற்கும் செயல்களில் ஈடுபடும்போது, பலரிடத்தில் கனிவாகவும், சிலரிடத்தில் கடுமையாகவும் நடந்து கொண்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்துகின்றனர்.
பணியின் போது கரோனா தாக்கும் ஆபத்து இருக்கும் போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் துணிந்து பணியாற்றுகின்றனர். ஊரடங்கு 90 விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றிருப்பதற்கு காவல்துறைதான் முக்கியக் காரணமாகும்.
அதேபோல், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 அவசர ஊர்தி பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த இரு பிரிவினரின் பணியின்போதும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம் ஆகும். ஆனாலும் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் துணிந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தியாகத்தால்தான் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது.
இவர்களின் தியாகமும், தன்னலமற்ற சேவையும் போற்றத்தக்கது ஆகும். அவற்றை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியமும், ரூ.50 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் காவலர் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கும், பணி நேரத்தில் அளிக்கப்படும் வேலைகளுக்காகவும் தங்களின் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஆகும் செலவை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு தற்காலிகமாக எரிபொருள் படி வழங்க அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago