தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் ரூ.1000 நிவாரணம் விநியோகம்- விதிவிலக்கான நபர்களுக்கு நேரில் வழங்கவும் திட்டம்

By செய்திப்பிரிவு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் வழங்கப்படும் ரூ.1000 நிவாரண உதவித் தொகையை, விதிவிலக்கான நபர்களைத் தவிர மற்றவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று உணவுத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களைக் கருத்தில் கொண்டு, ரூ.3,280 கோடிக்கான பல்வேறு நிவாரண திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். நியாயவிலைக் கடைகளில் ரூ.1000 மற்றும் பொருட்கள் கொடுப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.1000 நிதியுதவி மற்றும் அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் திட்டம் நாளை தொடங்கி, ஏப்.15-ம் தேதி வரை நடபெறும். தற்போது கரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களை நியாயவிலைக் கடைகளில் குவிப்பதை தடுக்க, டோக்கன் வழங்கப்பட்டு அதன்மூலம் தினசரி 75 அல்லது 100 பேருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நேற்று தமிழக உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். உறைகளில் வைத்து வழங்கக் கூடாது. மேலும் நிவாரண உதவித்தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் நியாயவிலைக் கடைகளில் மட்டுமேவழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மலைப்பகுதியில் வசிக்கும் விதிவிலக்கான நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை, பொருட்கள் தேவைப்பட்டால் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கலாம். அவ்வாறு வழங்கும் போது வரைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கெனவே முதல்வர் தனது அறிக்கையிலும் நேற்று பேட்டியிலும் தங்கள் பகுதியில் உள்ள சூழல் அடிப்படையில் நிவாரணம் வழங்கும் நடைமுறையை முடிவு செய்யலாம் என தெரிவித்திருந்தார். அதன்படி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நகர்ப்புறங்களில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி அதன்மூலம் வழங்கவும் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 75 அல்லது100 பேர் வீதம் டோக்கன் கொடுத்துஅதன் மூலம் வழங்கவும் முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளிலும் இறங்கியுள்ளனர்.

சென்னையில் அண்ணா நகர், தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருப்பதாலும், சில பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பொருட்கள் நேரடியாக வழங் கப்படும் என உணவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், பொதுமக்களை நிவார ணத்துக்காக ஒரே இடத்தில் கூடச் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய அரசு உதவி எப்போது?

தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக நிவாரண உதவி அறிவித்த நிலையில், ‘‘நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக நியாயவிலைக் கடைகள் மூலம் தற்போது வழங்கப்படும் பொருட்களுடன் கூடுதலாக வழங்கப்படும்’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 26-ம் தேதி அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழக உணவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘இதுவரை மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பான தகவல்கள் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. அந்த பொருட்கள் தனியாகத்தான் வழங்கப்படும். தற்போதைக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வழங்க உள்ளோம். தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கெனவே குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் அடிப்படையில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்