குறைவான நிதியாதாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களையும் தமிழக அரசால் காப்பாற்ற முடியுமா என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், "உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று 170 நாடுகளில் பரவி 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 31 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாயிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67. நேற்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படப்போகிற விளைவுகள் குறித்து மிகுந்த தீவிரத் தன்மையோடு இப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் அணுகியதா என்பதை ஆய்வு செய்கிறபோது மிகுந்த வேதனைதான் மிஞ்சுகிறது.
கடந்த டிசம்பர் 31 ஆம் நாள் சீனாவில் வூஹான் நகரத்தில் தொற்று நோய் பாதிப்புகள் குறித்து செய்திகள் வெளிவந்தன. ஜனவரி 7 ஆம் தேதி முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. ஜனவரி 25 ஆம் தேதி 56 மில்லியன் மக்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இறுதியாக, பிப்ரவரி 29 ஆம் தேதி 3,150 பேர் உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சீனாவில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
» 144 தடை உத்தரவு மீறல்: சென்னையில் 589 வழக்குகள் பதிவு; 686 வாகனங்கள் பறிமுதல்
» கலைஞர் அரங்கை கரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையரிடம் திமுக கடிதம்
இந்திய மக்கள் தொகையை ஒத்த அளவிலான சீன நாட்டில் நிகழ்ந்த கரோனா வைரஸ் உயிரிழப்புகளை பார்த்த பிறகு இந்திய அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மார்ச் 4 ஆம் நாள் தான் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகிற பயணிகளை பரிசோதிக்கிற நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு எடுத்தது.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கு வருகை புரிவதை தடை விதித்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி 21 நாள் ஊரடங்கை நரேந்திர மோடி அறிவித்தார். இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு, குறு தொழில்கள், உணவகங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்டன.
இந்தியாவில் ஏறத்தாழ 43 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். 90 சதவீத வேலைகள் இவர்களை கொண்டுதான் நடக்கிறது. 21 நாள் ஊரடங்கினால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.
நாடு முழுவதும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் 14 கோடி பேர் உள்ளனர். ஊரடங்கு அறிவிப்பினால் வேலைவாய்ப்பிழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தோளில் குழந்தைகளை சுமந்துகொண்டு தலையில் மூட்டை முடிச்சுகளுடன் டெல்லியிலிருந்து நொய்டா வழியாக யமுனா நெடுஞ்சாலையில் ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களை நோக்கி நடத்து செல்கிற காட்சியைப் பார்க்கிறபோது பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
இந்த அவலநிலையை நரேந்திர மோடியால் எப்படி பார்த்து சகித்துக்கொள்ள முடிகிறது? இதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு அவர்களுக்கு தங்குமிடத்தையும், உணவையும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?
அதற்கு மாறாக மத்திய அமைச்சர் ஜவடேகர் சாவகாசமாக எந்த சலனமும் இல்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரை பார்த்து ரசித்துக் களிப்படைகிறார். நாடு தீப்பற்றி எரிந்தபோது ரோம் நாட்டு மன்னன் பிடில் வாசித்த கதை தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னாலேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே, அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்களுடன் கலந்து பேசவோ பிரதமர் மோடி முன்வராதது ஏன்? 21 நாள் ஊரடங்கு அறிவித்தால் அதனால் நாட்டில் ஏற்படுகிற விளைவுகள் குறித்து மத்திய பாஜக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
ஊரடங்கு அறிவித்ததும் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் அவர்கள் இருக்குமிடத்திலேயே தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.
அதை செய்யாத நிலையில், அவர்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல வாகன வசதிகளை செய்துவிட்டு ஊரடங்கை அறிவித்திருக்க வேண்டும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படாததன் விளைவாக பேருந்துகளிலும், அதன் மேல்பகுதிகளிலும் லாரிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பயணம் செய்ததன் விளைவாக தொற்றுநோயை தங்களது கிராமங்களுக்குக் கொண்டு சென்று பரப்புகிற மிக கொடூரமான நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
சமூகப் பரவல், தனிமைப்படுத்துதல் பற்றி தொலைபேசியில் உரையாற்றிய நரேந்திர மோடியே தொற்று நோய் பரவலுக்குக் காரணமாக இருந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், அதற்கு எந்த அவசியமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருக்கிறார். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதை முதல்வர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்ற ஆளும்கட்சிக்கு சர்வாதிகார அணுகுமுறை வருவதற்கு எப்படி துணிவு வந்தது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்த தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக சுகாதாரத்துறையிடம் 2,100 சுவாசக்கருவிகள் மட்டுமே உள்ளன. கரோனா பாதிப்பு செய்திகள் கடந்த 3 மாதங்களாக நம்மை அச்சுறுத்தி வருகின்றன. 2,500 சுவாசக் கருவிகளும், 25 லட்சம் எண்-95 முகக் கவசங்களும் வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருக்கிறார்.
இத்தகைய காலதாமதமான நடவடிக்கையை விட அலட்சியமான போக்கு வேறெதுவும் இருக்க முடியாது.
கேரள அரசு கரோனாவை எதிர்கொள்ள ரூபாய் 20 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறது. நரேந்திர மோடி அரசு ரூபாய் 15 ஆயிரம் கோடியும், தமிழக அரசு ரூபாய் 3,000 கோடியும் ஒதுக்கியிருக்கிறது.
இத்தகைய குறைவான நிதியாதாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களையும் அச்சம், பீதியோடு வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிற அவர்களை எடப்பாடி பழனிசாமி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
இங்கு எழுப்பப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை குறித்து ஆய்வு செய்து இவற்றுக்கு உரிய தீர்வை காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago