144 தடை உத்தரவு காரணமாக விற்க முடியாததால் செடியிலேயே முதிர்ந்து அழுகும் வெற்றிலைகள்

144 தடை உத்தரவு காரணமாக விற்பனை செய்ய முடியாததால் வெற்றிலைகள் செடியிலேயே முதிர்ந்து அழுகும் நிலையை எட்டியதால் தருமபுரி மாவட்ட வெற்றிலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் சோலைக் கொட்டாய், வெள்ளோலை, லளிகம், மிட்டாரெட்டி அள்ளி, தாளநத்தம், பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது. 144 தடை உத்தரவு காரணமாக விவசாயிகள் தற்போது வெற்றிலையை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுபற்றி பொம்மிடி பகுதி விவசாயி நடேசன் கூறியது:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன்பாளையம் வெற்றிலை சந்தைக்குத்தான் இங்கிருந்து பெரும்பகுதி வெற் றிலை செல்லும். சிலர், வயலை தேடி வரும் வியாபாரிகளிடமும் விற்பனை செய்வர். 144 தடை உத்தரவால் வாகன போக்குவரத்து முடங்கி விட்டது. வேளாண் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல தடையில்லை என அரசு கூறினாலும், வழிநெடுக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். மேலும், நுகர்வோருக்கு வெற்றிலை சென்று சேர்வதிலும் பல தடைகள் உள்ளது. இந்த கராணங்களால் வியாபாரிகள் வெற்றிலையை வாங்க முன்வரவில்லை.

குறிப்பிட்ட நாள் இடைவெளியில் வெற்றிலையை பறிக்காவிட்டால் ஓரிரு நாட்களில் இலை முற்றி விற்பனைக்கு உதவாமல் ஆகிவிடும். தற்போது, முற்றிய இலைகளும் செடியிலேயே அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளோம்.

எனவே, இருப்பு வைக்க முடியாத விளைபொருளான வெற்றிலை தேக்கமடையாமல் விற்பனைக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு அறிவித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE