வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதி செய்து தருக: அன்புமணி ராமதாஸ் 

By செய்திப்பிரிவு

டெல்லி போன்ற நிலை வராமல் இருக்க சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உணவு, இருப்பிடமின்றி வாடும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு கொடுத்து கரோனா பரவல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து தொழில்களும், கட்டுமானப் பணிகளும் முடங்கி விட்ட நிலையில், உள்ளூர் தொழிலாளர்களைப் போலவே பிற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்கத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். தலைநகர் டெல்லி மற்றும் தேசியத் தலைநகரப் பகுதிகளில் வாழ்வாதாரம் இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களின் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன.

இதே நிலை அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. மராட்டியம், கோவா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தமிழக முதல்வரும், அதிகாரிகளும் பேசி, அங்குள்ள தமிழர்களுக்கு உணவு, இருப்பிடம் கிடைக்க வகை செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வட மாநிலங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் தங்க இடமின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்களை எந்த நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தினவோ, அந்த நிறுவனங்கள்தான் அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். அதன்படி அவர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ஆனால், தனியார் நிறுவனங்களில் அமைப்பு சார்ந்த பணிகளில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அமைப்பு சாராத தினக்கூலி பணியாளர்களாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத் தொழிலாளர்களில் 20 விழுக்காட்டினருக்கு மட்டுமே தங்குமிட வசதியும், உணவு வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.

மீதமுள்ள 80 விழுக்காட்டினருக்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடியுள்ள நிலையில், அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால், அது தமிழகத்திலுள்ள மற்றவர்களையும் தாக்கக் கூடும். அவர்களைப் பாதுகாப்பான சூழலில் தங்க வைப்பதன் மூலம் தான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்விளையாட்டரங்குகளில் தங்க வைக்கவும், அவர்களுக்கு சமுதாய சமையலறைகள் மூலம் சூடான உணவு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்