தமிழக அரசே சானிடைசர் உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கலாம்: மார்க்சிஸ்ட் யோசனை

By செய்திப்பிரிவு

தமிழக அரசே தொழிற்சாலை மூலம் சானிடைசர் உற்பத்தி செய்து அதனை நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 28) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், "தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பை நல்கி வருகிறார்கள். இருப்பினும் இவ்வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுக உயர்வது மிகுந்த கவலையளிக்கிறது. அடுத்த சில நாட்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலையில் அதை சமாளிக்க நாடு முழுவதும் பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில மாநில அரசுகள் ஒரு லட்சம் படுக்கை வசதிகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில மாநிலங்களில் தங்கும் விடுதிகளிலுள்ள 20 ஆயிரம் அறைகளைத் தயார் செய்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சில மாநிலங்களில் தற்காலிக மருத்துவமனைகள் போர்க்கால அடிப்படையில் கட்டப்படுவதாக செய்திகள் உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசும் நிலைமையை ஈடு கொடுக்க பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தகுந்தது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர்கள் சில ஆயிரம் என்ற நிலை வருமாயின் அதைச் சமாளிக்க உரிய முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் இதற்கென ஒரு வார்டு ஒதுக்கி தயார் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டும் போதுமானதாகத் தோன்றவில்லை. மேலும், சில தனியார் மருத்துவமனைகளையே ஒட்டுமொத்தமாக இதற்கென ஒதுக்கீடு செய்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றுவது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

செங்கல்பட்டிலுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் 'இந்துஸ்தான் பயோடெக்' நிறுவனத்தை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்நிறுவனத்தில், சானிடைசர் தயாரிப்பதற்கும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வதற்கும் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் உள்ளதைப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசை அணுகி உரிய அனுமதிகளைப் பெற்று மேற்கண்ட நடவடிக்கைகளை அவசரமாக தொடங்கிட வேண்டும்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துவது அவசியமானது என்றாலும் அதுமட்டுமே போதுமானதல்ல என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வைரஸ் அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்வதற்கான ஏற்பாடும் அதற்கான மருத்துவக் கட்டமைப்புகளையும் அவசரமாக உருவாக்கிட வேண்டும் என மேற்கண்ட நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வைரஸ் அறிகுறியுள்ள அனைவரையும் சோதனை செய்தவற்கான விரிவான ஏற்பாடுகள் செய்வதும், பாதித்துள்ளவர்களை ஆங்காங்கே தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதற்கான மருத்துவக் கட்டமைப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் சானிடைசர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசே தொழிற்சாலை மூலம் சானிடைசர் உற்பத்தி செய்து அதனை நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும்.

தற்போது நிலவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். எவ்வளவு வற்புறுத்திய பிறகும் இவர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்புக்கான சிறப்பு உபகரணங்கள் எண்-95 முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பணியாற்றும் இதர மருத்துவர்களுக்கும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. சாதாரண காலங்களில் பயன்படுத்தும் அல்லது ஹெச்ஐவி நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கும்போது பயன்படுத்தும் உபகரணங்களே வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, அவசர அவசியமாக மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் தடுப்புக்கான பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கிட கேட்டுக்கொள்கிறேன். மேலும், தனிமைப்படுத்தும் வார்டுகள், காய்ச்சல் பிரிவு வார்டுகளில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் பலவிதமான இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்துள்ளது. அரிசிப் பற்றாக்குறையின் காரணமாக தென்மாவட்டங்களில் கிலோ ரூ.50, 60 என உயர்ந்துள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களான வாழை, கொய்யா, மலர்கள், பலா, தர்பூசணி, வெள்ளரிக்காய், முருங்கைக்காய், கடலை, தேயிலை போன்ற சாகுபடியான பொருட்கள் விற்பனை செய்ய இயலாமல் அவை அழுகி வருகின்றன. கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பாலை விற்க முடியவில்லை. காய்கறிகள் மற்றும் விவசாயப் பொருட்கள் உற்பத்தியான இடங்களிலிருந்து சந்தைகளுக்கு எடுத்து வர முடியாமல் தேங்கிக் கொண்டிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதுபோன்ற பட்டியலிட முடியாத அளவுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நீண்டு கொண்டுள்ளன.

தமிழகம் சந்திக்கும் இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையை அரசு மற்றும் ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து கலந்துரையாடல் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனவும், ஒருவேளை கூட்டமாக நடத்த முடியாவிட்டால் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்