குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக அரசு அறிவித்துள்ள நிவாரண அறிவிப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்பதை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என ஸ்டாலின் கோரியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்று நோய் பரவிடாமல் தடுத்திடும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்குப் பிரகடனத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான; நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிக் கடன் வசூலைத் தள்ளி வைக்கும் திட்டத்தையும் திமுக சார்பில் வரவேற்கிறேன்.

வருமானம் மற்றும் பொருளாதார பேரிழப்புகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கைகள் ஓரளவிற்கு உதவும் என்றாலும், மாநிலங்களுக்கு 'கரோனா நிதி' வழங்கி - கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை வெற்றி பெற வைப்பார் மத்திய நிதியமைச்சர் என்று எதிர்பார்த்தேன்.

கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காகத் தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வலியுறுத்துகிறேன்.

கரோனாவைத் தடுப்பது அனைத்து மாநிலங்களும் - மத்திய அரசுடன் கைகோர்த்து நின்று ஒன்றுபட்டு எடுக்க வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை என்பது ஒருபுறமிருக்க - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பாராமல் அனைவரும் ஓரணியில் நின்று இந்தப் 'பேரிடரை' எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

ஆகவே மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில், திமுக கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக எம்.பி., - எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாதச் சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு முதலில் அறிவித்தது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கிட வேண்டும் என்று திமுக எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதலில் உத்தரவிட்டது.

தொகுதி மக்களிடம் சென்று முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வகையில் அதிமுக அரசு அறிவித்துள்ள 3,280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்ற நிலையில், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும்.

குறிப்பாக 110-வது விதியின் கீழ் மார்ச் 24-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய்” என்று கூறப்பட்டது. ஆனால் மார்ச் 25-ம் தேதி தொலைக்காட்சி உரையில் “அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிதியுதவி” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்க்குப் பதில் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்று மாத காலத்திற்கு கடன் தவணைகள், அசல்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் - கூட்டுறவுக் கடன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம், சொத்து வரி, டிரைலர் லாரிக்கு கட்டப்படும் சாலை வரி உள்ளிட்டவற்றையும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் 30 - 40 நாட்களைக் கடந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அறுவடைக்குத் தயாரான கடலை பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து தெளிக்க முடியாமல் தடைப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாதிப்பைப் போக்கிடும் வகையில் - தொகுப்பு நிவாரண அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிசாமி உடனடியாக வெளியிட வேண்டும்.

கரோனா நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கை 99 சதவீதத்திற்கு மேலான மக்கள் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்களின் உறுதிப்பாட்டையும் ஒற்றுமை உணர்வையும் எண்ணி உள்ளபடியே நான் பெருமிதம் கொள்கிறேன்.

அதே நேரத்தில் ஒரு சிலர் வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அவசர - அவசியத் தேவைகளுக்காக வருவோரை அறிவுரை கூறி அனுப்பி வைப்பதுதான் சாலச் சிறந்ததாக இருக்க முடியும்.

கரோனா தடுப்பின் ஆர்வத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையில் உள்ள சிலர் வெளியே வருவோரின் வாகனங்களை அடித்து நொறுக்குவதும், கண்ணை மூடிக் கொண்டு தடியடித் தாக்குதல் நடத்துவதும், வாகனங்களின் காற்றைப் பிடுங்கிவிட்டு நெருக்கடி ஏற்படுத்துவதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

அப்படி வெளியே வரும் ஒரு சிலரும் அவசியத் தேவைகளுக்காக வெளியே வருகிறார்களே தவிர, ஊரடங்கை மீற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அல்ல என்பதை காவல்துறையில் உள்ள அந்த 'ஒரு சில' நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா என்பது கொடிய நோய் என்பதால், சமூகத் தொற்றை அறவே தடுக்கும் பொருட்டு, மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடித்து - ஒரு சிலர் வெளியில் செல்வதையும் தவிர்த்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்