எங்களுக்கென்ன இதெல்லாம் புதுசா? - துப்புரவுப் பணியாளர்களின் குரல்

By நந்தினி வெள்ளைச்சாமி

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் "இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்" என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.

கரோனா பெருந்தொற்றின் முன்பு அச்சத்துடன் தங்கள் கடமைகளைச் செய்துவரும் துப்புரவுப் பணியாளர்கள், பக்கத்து தெரு மளிகை கடைக்காரர், காவலாளி, மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்பவர், போக்குவரத்து ஊழியர்கள் என, அத்தனை சாமானியர்களின் கடமையையும், தேவையையும் நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம்.

அன்றாட வாழ்வின் முக்கியமான சங்கிலிகளை இணைக்கும் சாமானியர்கள், ஒரு பேரிடர் காலத்தில் முடங்கிப்போனால், நம் அன்றாட வாழ்வு என்னவாகும்? நாடு என்ன ஆகும்? என்ற கேள்வியை சமூகத்தின் அலட்சிய உணர்வின் முன்பு ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது கரோனா அச்சம்.

கரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க மூன்று நடவடிக்கைகள் மிக முக்கியம். அவை, "வீட்டில் இருங்கள், வீட்டிலே இருங்கள், வீட்டிலேயே இருங்கள்" என்பதுதான். வெளியே சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க வைத்துள்ளது.

ஆனால், வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியே சென்றால் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க முடியாமல், தமிழகத்தின் துப்புரவுத் தொழிலாளர்கள், தொற்று தமக்கு வந்துவிடுமோ என்ற பேரச்சத்திலும் மக்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழு மூலமாக துப்புரவுப் பணி மேற்கொண்டு வரும் கோமதிக்கு (42), கரோனா தொற்றில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். ஆனால், அவரால் அப்படி இருக்க முடியவில்லை.

"லீவு போட்டால் சம்பளம் போய்விடும். லீவு போட்டால் இனி வேலைக்கே வர வேண்டாம் எனச் சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் இருக்கிறது. பயத்தோடுதான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று வருகிறோம். வீடு, வீடாகச் சென்று குப்பைகளை வாங்க வேண்டும். அவற்றை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை அரைக்கும் ஆலைகளுக்குக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நானும் இன்னொருவரும் சேர்ந்து எங்கள் வார்டில் உள்ள 2,000 வீடுகளுக்குச் சென்று குப்பைகளை வாங்க வேண்டும். காலை 6 மணிக்குத் தொடங்கினால் 2 மணியாகிவிடும். எங்களுக்கு வேலைக்குச் சென்றால்தான் சம்பளம். போகாவிட்டால் ஒன்றும் இல்லை" என்கிறார், கோமதி.

கோமதி போன்று மகளிர் சுய உதவிக்குழு மூலமாக துப்புரவுப் பணி மேற்கொள்பவர்களுக்கு ஒருநாளைக்கு வழங்கப்படும் சம்பளம் 440 ரூபாய்.

"கையுறை மட்டும் கொடுத்துள்ளனர். அதுகூட, இந்தக் காய்ச்சல் பயம் வந்த பிறகு, 2 நாட்கள் முன்னர்தான் வழங்கினர். 25 ரூபாய் கொடுத்து ஒரு வாரமாக நாங்கள்தான் ஒவ்வொரு நாளும் மாஸ்க் வாங்கிப் பயன்படுத்தினோம். இப்போது கடைகள் பெருமளவில் இல்லாததால் முகக் கவசம் வாங்க முடியவில்லை. மாநகராட்சியில் கேட்டால் இன்னும் மாஸ்க் வரவில்லை என்கின்றனர்" என்கிறார் கோமதி.

துப்புரவுப் பணி செய்யும்போது சமூக இடைவெளியைக் கூட தங்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை என்பது கோமதி போன்றவர்களின் வேதனையாக உள்ளது.

"சமூக இடைவெளியை எங்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை. ரெண்டு பேர் சேர்ந்துதான் குப்பைகளை வாங்குகிறோம். பிரித்து எடுக்கிறோம். அப்புறம் எப்படி இதனைக் கடைப்பிடிப்பது? ஆனால், பொதுமக்கள் சற்று தள்ளிதான் எங்களிடம் குப்பைகளை வழங்குவர். நாங்களும் 'கொஞ்சம் தள்ளியே நில்லுங்க' என்று அவர்களிடம் சொல்லிவிடுவோம். காலை 10 மணிக்குக் கை கழுவுவோம். அதன்பிறகு வேலை முடிந்தபிறகுதான் கழுவுவோம். வேலையே சரியாக இருக்கும், கைகழுவ நேரம் இருக்காது. எங்களுக்கு எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யவில்லை" என்றார் கோமதி.

தங்களுக்கு வழங்கப்படும் முகக் கவசங்கள் தரமானதாக இல்லை என்கிறார், சென்னை, செம்பாக்கத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் மோகன், 50.

"பொதுமக்களுக்காக நாங்கள் வேலை செய்கிறோம். பொதுமக்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர்களுக்காக நாங்கள் அர்ப்பணிப்புப் பணிகளைச் செய்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு இன்னும் மாஸ்க் கூட கொடுக்கவில்லை. ஒரு நாளைக்கு 2 மாஸ்க், 2 கையுறைகள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மாநகராட்சியில் கேட்டால் 600-700 முகக் கவசங்கள் இருக்கின்றன என்கின்றனர். ஆனால், இன்னும் எங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை. சில இடங்களில் கொடுக்கப்படும் மாஸ்க் தரமானதாக இல்லை. பஞ்சு மாதிரி இருக்கும். கையுறைகள், காலுறைகளும் கிடையாது. கவச உடை என்ன தெரியுமா? 'ரெயின் கோட்'. அதை அணிந்த 5 நிமிடத்தில் உடம்பு முழுவதும் வேர்த்துக் கொட்டுகிறது. அதில், எப்படி வேலை செய்ய முடியும்?" எனக் கேள்விகள் எழுப்புகிறார்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம் என்பது மோகன் போன்றவர்களின் பெருங்குறையாக இருக்கிறது.

"ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. அவர்களும் மனிதர்கள் தானே! நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அதைக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 300-330 ரூபாய் தான் வழங்கப்படும். ஒப்பந்த பணியாளர்களைப் பொதுமக்கள் நடத்தும் விதமும் மிக மோசமானது" என்கிறார்.

சமூக இடைவெளி குறித்துக் கேட்டால், "அம்மா உணவகத்தில் நாங்கள் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுகிறோம். அவ்வளவு கூட்டமாக இருக்கும். எங்களுக்கு வருகைப் பதிவு குறிப்பிடும்போதும் கூட்டமாகத்தான் நிற்கிறோம். அங்கு நாங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மதுரையைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர், இம்மாதிரியான அவசர காலங்களில் பணியாற்றும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என வருந்துகிறார்.

"கரோனாவுக்கு உலகமே பயந்துகொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரை வேலைக்குச் செல்கிறோம். அவசரப் பணி என்றாலே கூடுதல் சுமை இருக்கும். ஆனாலும், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். அதுதான் நாங்க. சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் நான் அவசரப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கென ஒதுக்கப்பட்டதெருக்களில் குப்பையை அகற்றுவது, பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் துப்புரவுப் பணியாளர்கள் தான். பயந்துகொண்டு வீடுகளையும், தெருக்களையும் சுத்தம் செய்யாமல் இருந்தால் என்னவாகும்? இது மக்கள் பணி. இதற்காக எங்களுக்கு விருது கூட தர மாட்டார்கள். அதையே தீண்டாமையாக நினைக்கிறேன்" என ஆதங்கப்படுகிறார்.

துப்புரவுப் பணியாளர்களுள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தான் பெரும்பாலும் முகக் கவசங்கள் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்ததாரர்தான் மாநகராட்சியிடம் வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கித் தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் பழனி, "மனுஷனா பொறந்தா பயம் இருக்கத்தான் செய்யும். பயந்து வீட்டுக்குள் இருந்தால் சோறாக்க முடியுமா? பொண்டாட்டி, பிள்ளைகளப் பாக்க முடியுமா? 3 வேளை பசிக்காமல் இருக்குமா? சாப்பிடாமல் இருக்கத்தான் முடியுமா? நான் மட்டும் தான் வேலை செய்கிறேன். வாடகை வீடுதான். எங்களுக்கு எங்கும் மரியாதை கிடையாது. இதையெல்லாம் பார்த்தால் பிழைக்க முடியுமா? கரோனா தொற்று என பயமுறுத்தும் வார்த்தைகளை சொல்கின்றனர். இதனை பத்தோடு பதினொன்னாதான் நான் பார்க்குறேன். குப்பைகளை அள்ளும்போது எத்தனையோ கூரான பொருட்கள் வந்து கையைக் கிழிக்கும். அடிக்கடி வயிற்றுவலி, தலைவலி வரும். இதென்ன எங்களுக்கு புதுசா?" என்றார்.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

"இந்த அவசர காலதில் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. 'ஷிஃப்ட்' முறையில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தால் நல்லது. பணிச்சுமை அதிகமானாலும், அதற்கான ஊதியம் போதுமானதாக இல்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கு 350 ரூபாய் தான். பேரூராட்சி என்றால் இன்னும் குறைவு. கிராமப்புற ஊராட்சிகளில் 100-150 ரூபாய்தான் கிடைக்கும்" என்றார் மணி.

இத்தகைய குரல்களின் வலிகளை சமூகம் உண்மையிலேயே புரிந்துகொள்ளுமா என சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ளது, சோழிங்கநல்லூர் பகுதியில் துப்புரவுப் பெண் பணியாளரை வீட்டு உரிமையாளர் ஒருவர் சாக்கடையில் தள்ளி தாக்கி, ஆடைகளைக் கிழித்த அவலம்.

சமூக - பொருளாதார பலத்திலிருந்துதான் அதிகார அடுக்கில் இங்கிருக்கும் தொழில் பிரிவுகள் 'அந்தஸ்து படுத்தப்படுகின்றன'. ஆனால், உலகமே உயிருக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கியிருக்கும் காலத்தில், ஊர் ஆரோக்கியத்துக்காக இன்னமும் தெருக்களில் நிற்கிறார்கள்; முழுமையான பாதுகாப்பு கூட இல்லாமல்.

அவர்களின் அர்ப்பணிப்பு சமூகம் தன் வசதிகளுக்காக கடைப்பிடித்து வரும் அதிகார அடுக்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெட்கி கூசச்செய்கிறது. நம் சமூக - பொருளாதாரக் கணக்குகளை போலி என்றாக்குகிறது.

21 நாள் ஊரடங்கில், மிச்சமிருக்கும் நாட்களில் நம் வீட்டுக்குள்ளேயே வாழ, இத்தகைய துப்புரவுத் தொழிலாளர்களின் அன்றாட வேலைகள் தெருக்களில் தேவைப்படுகின்றன. குப்பைகளை அகற்றவும், தெருக்களைச் சுத்தப்படுத்தவும், கிருமி நாசினி தெளிக்கவும் அவர்கள் தேவை. நம் வீட்டுக் குழந்தைகள் கொசுக்கடி இல்லாமல் இருக்கவும், நம் வீட்டு முதியவர்கள் குப்பைக் கூலங்களால் மூச்சுத்திணறாமல் சுவாசிக்கவும் அவர்களது பணி நிச்சயம் தேவை. பொது சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் துப்புரவாளர் குடும்பங்களின் அடிப்படை சுகாதாரத்துக்கும், அச்சமின்மைக்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசின் கடமை.

கரோனா அச்சத்துக்கு நடுவே நமக்கு சிந்திக்கக் கிடைத்திருக்கும் சமூக நிலைமை இது.

ஆம். உயிரைப் பந்தயம் வைத்து வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சமூக - பொருளாதார ரீதியாக நாம் என்ன மதிப்பீட்டை வழங்கியுள்ளோம் என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது. ஏனெனில், இங்கிலாந்து இளவரசரையும், கனடா பிரதமரின் மனைவியையும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனையும் துரத்திப் பிடித்த கரோனா, துப்புரவுப் பணியாளர்களுக்கு மட்டும் இரக்கம் காட்டாது இல்லையா?

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்