கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தால் பேரிடர்  சட்டம் பாயும்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு


கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக அதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது பேரிடர் சட்டம் பாயும் என அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“இந்திய நாடு உட்பட 198 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 என்கிற கொரோனா வைரல் நோய் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவி வருவதையும், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் நோயினை ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு, கடந்த மார்ச் 14 அன்று (அரசு ஆணை எண்.95, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,)-ன்படி, கொரோனா வைரஸ் நோயினை ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழக முதலவர் தலைமையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை பற்றியும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஐந்து முறை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் தமிழக மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு, 3250 கோடி ரூபாய் மதிப்பீடில் பல்வேறு நிவாரண உதவிகளை முதலவர் அறிவித்துள்ளார்.
இதுவன்றி, கரோனா நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கீழ்க்கண்டவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன-

* தமிழகத்தில் மார்ச் 24 முதல் மாலை 6.00 மணி முதல் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

* குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144- ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பொது மக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

* வெளி நாடுகளிலிந்து வந்து, வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களது வீட்டின் சுவற்றில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் கைகளில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் தங்கியிருக்காமல் வெளியே செல்லும் பட்சத்தில், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பிரத்யேகமான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் / இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

* இராணுவம், மத்திய பாதுகாப்பு படை, சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பேரிடர் மேலாண்மை , மின் உற்பத்தி மற்றும் பகிர்மான அலகுகள், அஞ்சலகங்கள், தேசிய தகவல் மையம் மற்றும் பேரிடர் தொடர்பான முன் எச்சரிக்கை தகவல்களை வழங்கும் மத்திய அரசின் அமைப்புகள் ஆகியவை தவிர, மத்திய அரசின் அனைத்து அலுவலகங்கள் / நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதில், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம், சுங்கத் துறை மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இயங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* அதே போன்று, மாநில அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய சேவைகளை கவனிக்கும் துறைகள் தவிர மற்ற அனைத்து துறை அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் அல்லாத மற்ற துறையினைச் சார்ந்த அலுவலர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அத்தியாவசிப் பொருட்கள் அல்லாத வேறு கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும், நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டுள்ளன.
* அரசு மற்றும் தனியார் பள்ளி / கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, அதில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுhரிகள் இயங்குவதோடு, அனைத்து மருத்துவமனைகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், திறக்கப்பட்டுள்ள மருந்தகங்களில் முகக்கவசம், சானிடைஸர் உட்பட்ட அத்தியாவசிய மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படாமல் இருப்பதற்கும், அவை பதுக்கப்படாமல் இருப்பதற்கும், மாவட்ட நிருவாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* மருத்துவமனைகளில், என்.95 முகக் கவசங்கள், வென்டிலேட்டர்கள், தற்காப்பு மேலுறைகள், மருந்துகள், கிருமிநாசினிகள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

* வரும் மாதங்களில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணிப் பெண்களது விபரங்களை சேகரிக்கவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களது மகப்பேறுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதோடு, வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்-களில்) போதிய அளவு பணம் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* இதுவன்றி, வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்-கள்) அமைந்திருக்கும் இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்க மாவட்ட நிருவாகம் மற்றும் வங்கி நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் உணவகங்களுக்கு வந்து உணவு வாங்கிச் செல்லும் வகையில், உணவகங்களை திறந்து வைக்க உணவக உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

* உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அம்மா உணவகங்களில் சூடான உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அம்மா உணவகத்தை கிருமிநாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்கள் தடையின்றி இயங்கவும், பொது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், கடைகளுக்கு வரும் பொது மக்கள் வரிசையில் நிற்கவும், ஒவ்வொருவருக்கும் இடையில் 3 அடி இடைவெளி விட்டு நிற்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* பொது போக்குவரத்தான, பேருந்துகள், ஆட்டோக்கள், சீருந்துகள் நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளான ஆம்புலன்ஸ் வாகனங்கள், பால், காய்கறி, குடிநீர் மற்றும் குடிமைப் பொருள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* அத்தியாவசியப் சேவைகள் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை தொடர்ந்து தடையின்றி இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிறுத்குமிடம், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது.

* அத்தியாவசிய நிலையில் இயங்கும் அலுவலகங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கவும், இந்த அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் கை கழுவுகதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களில் பொது மக்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மார்ச். 16 க்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகபட்சமாக 30 நபர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மார்ச். 16-க்கு பின்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்காக, பொது மக்கள் திருமண மண்டப உரிமையாளர்களிடம் முன் பணம் செலுத்தி, முன் பதிவு செய்திருப்பின், அந்த முன்பணத் தொகையினை திருப்பி அளிக்க திருமண மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

* கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

* ஆதரவற்ற மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான சமுதாய சமையலறைகள் அமைக்கப்பட்டு, உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

* கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதிப்பிற்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* அதே போன்று வெளி மாநிலத்திலிருந்து வந்து இம்மாநிலத்தில் பணிபுரியும் கட்டுமானப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* அரசின் மேற்சொன்ன ஆணைகளை முறையே நடைமுறைப்படுத்தும் பொருட்டு, துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் இன்சிடென்ட் கமாண்டராக பணிபுரிய அறிவுரைகள் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்சிடென்ட் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களின் அறிவுரையின் பேரில் மற்ற துறை அலுவலர்கள்ஒருங்கிணைந்து பணிபுரிவார்கள்.

* கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையமும் கூடுதல் பணியாளர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் சுகாதாரத் துறையினைச் சார்ந்த அலுவலர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த அறிவுரைகள் வழங்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்