முதல்வர் நாராயணசாமியிடம் காசோலை வழங்கும் ரவிக்குமார் எம்.பி. 
தமிழகம்

புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார்

அ.முன்னடியான்

புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தங்களுடைய ஒரு மாத ஊதியம் தலா ரூ.1 லட்சத்தை அளித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தடுப்புக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்ய புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 'கோவிட்-19 நிவாரண நிதி புதுச்சேரி' என்ற பெயரில் தனிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

"பெரிய தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கரோனா தொற்று தடுப்புக்கு நிதி தர வேண்டும். புதுச்சேரி எம்எல்ஏக்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 சதவீதத்தை வழங்க வேண்டும்" என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், பல்வேறு எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும், எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 சதவீதத்தையும் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தங்களுடைய ஒரு மாத ஊதியமான தலா ரூ.1 லட்சத்தை அளித்துள்ளனர்.

இதற்கான காசோலைகளை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் நாராயணசாமியிடம் ரவிக்குமார் எம்.பி. இன்று (மார்ச் 27) அளித்தார். பின்னர் அவர் கூறும்போது, "தமிழகத்தில் இருந்து புதுச்சேரி நிவாரண நிதிக்கு நிதி வழங்குவது இதுவே முதல் முறை" என ரவிக்குமார் தெரிவித்தார்.

இதேபோல், புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ சிவா தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சத்துக்கான அனுமதிக் கடிதத்தை கரோனா பொது நிவாரணத்துக்கு அளிப்பதாக முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்தார்.

SCROLL FOR NEXT