காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 27) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவம் மற்றும் தூய்மை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள், கரோனா அச்சத்தால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார இழப்புகளை ஈடு செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

பேரழிவுகள் ஏற்படும்போது அதனால் ஏற்படும் வாழ்வியல் பாதிப்புகளை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளும் மிகவும் முக்கியம் ஆகும். இதுதான் பேரிடர் மேலாண்மையின் அடிப்படையாகும்.

அந்த அடிப்படையில்தான் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்வாதார உதவிகள், வரிச்சலுகைகள், வங்கிக் கடன் தவணை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு, அதற்கான வட்டித் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கடந்த 19-ம் தேதி முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதையேற்று, மத்திய, மாநில அரசுகள் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, பல்வேறு வகைகளில் நிதியுதவி என ஏராளமான வாழ்வாதார உதவிகளை அறிவித்திருக்கின்றன. அவை அனைத்தும் பயனளிக்கக்கூடியவை.

தமிழக அரசு அடுத்தகட்டத்துக்கு சென்று, பொதுமக்கள் எவரும் கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாததால் தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை வழங்கிய மாதாந்திர, வாராந்திர, தினசரி கடனுக்கான வட்டி மற்றும் அசல் வசூலை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

அதேபோல், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பல்வேறு தரப்பினரும் பெற்ற பல்வேறு வகையான கடன்களுக்கான மாதத் தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்காதது அமைப்புசாராத் தொழிலாளர்கள் முதல் அமைப்பு சார்ந்த பணியாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அத்தகைய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். அவரது பதில் நம்பிக்கையளிக்கிறது.

ஆனால், காலம் கரைந்துகொண்டிருக்கிறது. வாகனக் கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மார்ச் மாதத் தவணையை ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முதல் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கும். பெரும்பாலான வங்கிகள் மாதாந்திரக் கடன் தவணையை, கடன்தாரர்களின் வங்கியிலிருந்து மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாகவே பெறுகின்றன என்பதால் அதற்கான ஏற்பாடுகள் ஏப்ரல் ஒன்றாம் தேதியே தொடங்கிவிடும்.

அதற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதாலும், அவற்றிலும் இரு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் மாதாந்திரக் கடன் தவணை ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுதான் முழுமையாக பயனளிக்கும்.

கரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்துவிட்டதாலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களின் இயக்கம் முழுமையாக முடங்கிவிட்டன.

மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட பலர் அன்றாட செலவுகளுக்கே பணமின்றி தவித்து வருகின்றனர். அதனால் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. இத்தகைய சூழலில் மாதாந்திர கடன் தவணை வசூலுக்கான ஆணை, கடன் கொடுத்த வங்கியிடமிருந்து வாடிக்கையாளரின் வங்கிக்குச் சென்று பணமில்லாமல் திரும்பிவிட்டால் அதற்காக தனியாக அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி கடன் தவணை செலுத்தத் தவறியதாகக் கூறி அவரது கடன் பெறும் மதிப்பு குறைக்கப்படும். அவ்வாறு குறைந்தால் அது எதிர்காலத்தில் அவர் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை பறித்துவிடும்.

எந்த ஒரு உதவியும் காலத்தில் செய்யப்படுவதுதான் முழுமையான பயனளிக்கும். எனவே, பல்வேறு வகை கடன்களுக்கான மாதத் தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன் அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் உடனடியாக வெளியிட வேண்டும்.

அதேபோல், காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்