கண்டக்டர் ஏற்படுத்திய கரோனா பீதி: அச்சத்தில் அட்டப்பாடி பழங்குடியினர்!

By கா.சு.வேலாயுதன்

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளம். இதுவரை இங்கு 109 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அட்டப்பாடி பிரதேசம் அரண்டுபோய்க் கிடக்கிறது. அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் மூலம் இங்கு கணிசமானோருக்குக் கரோனா பரவியிருக்கலாம் எனும் அச்சம்தான் இதற்குக் காரணம்.

இருளர் பழங்குடிகள் பெரும்பான்மையாய் வசிக்கும் அட்டப்பாடி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. கோவையிலிருந்து மேற்கே 28 கிலோ மீட்டரில் உள்ள ஆனைகட்டிதான் இதன் எல்லை. இங்கே தொடங்கி தாசனூர், கோட்டத்துறை, அகழி, கூலிக்கடவு, தாவளம், முக்காலி என 50 கிலோ மீட்டர் சென்றால் மன்னார்காடு நகரை அடையலாம். இந்தப் பரந்து விரிந்த ஏரியாவில் மட்டும் 196 ஆதிவாசி பழங்குடிகளின் செட்டில்மென்ட் கிராமங்கள் உள்ளன.

பழங்குடிகள் காட்டிலும், மேட்டிலும், வெயிலிலும், மழையிலும் அலைபவர்கள் என்பதால் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். எனவே, கரோனாவின் கொடுங்கரம் தங்களைத் தீண்டாது என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை எத்தனைத் தவறானது என்று இப்போது இம்மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இங்கேயிருந்து இத்தாலிக்கு, வீட்டு வேலைக்காகச் சென்ற ஒரு பெண்ணும், கல்வி பயிலச் சென்றிருந்த இரண்டு பெண்களும் சமீபத்தில் ஊர் திரும்பியிருக்கின்றனர். இவர்களில், வீட்டு வேலைக்காகச் சென்றிருந்த பெண், தற்போது கரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மன்னார்காடு மருத்துவமனையில் உள்ளார். மற்ற இரு மாணவிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, துபாய்க்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய 80 பேர், ஒரே பகுதியில் வீட்டுப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில்தான், கண்டக்டர் ரூபத்தில் வெடித்திருக்கிறது கரோனா பீதி.

கோழிக்கோட்டிலிருந்து தினசரி கோவைக்கு ஃபாஸ்ட் பாசஞ்சர் கேரள அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இது தினசரி காலை 9.30-9.45 மணிக்குக் கோவையை வந்தடைகிறது. பிறகு, புறப்பட்டு இரவு கோழிக்கோட்டைச் சென்றடைகிறது. இதில் பணிபுரியும் நடத்துநர் மன்னார்காடு காரக்குறிச்சியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை, அரபு நாட்டிலிருந்து சமீபத்தில்தான் ஊருக்குத் திரும்பியிருக்கிறார். மகனின் வீட்டிலும் தங்கியிருக்கிறார். தவிர சுற்றுவட்டாரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்து, விருந்து உபச்சாரங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அவர் சளி, காய்ச்சலுடன் மன்னார்காடு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த நடத்துநர் உள்ளிட்ட ஐவரை கரோனா கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளனர்.

தன் தந்தை வீட்டிற்கு வந்த காலத்திலிருந்து இந்தக் கண்டக்டர் மூன்று நாட்கள் கோழிக்கோடு டு கோயம்புத்தூர் ஃபாஸ்ட் பாசஞ்சர் பேருந்திலும், மற்ற மூன்று நாட்கள் திருவனந்தபுரம் டு கோழிக்கோடு ஃபாஸ்ட் பாசஞ்சரிலும் பணிபுரிந்திருக்கிறார். இவர் இப்படி பணிபுரிந்த நாட்களில் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களையெல்லாம் வலை வீசாத குறையாகத் தேடி வருகின்றனர் கேரள சுகாதாரத் துறையினரும் போலீஸாரும்.

அட்டப்பாடி பகுதியில், குறிப்பிட்ட தேதிகளில் இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், “இந்த நாளில் நீ அந்த பஸ்ல போனியா?” என்றே அட்டப்பாடிவாசிகள் ஒருவருக்கொருவர் உதறலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி அட்டப்பாடி தேக்குவட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, “இந்த பஸ்ஸை விட்டா எங்களுக்கு வேற பஸ் கிடையாது. அதனால, அந்த மூன்று நாளில் ஊர் சனம் பாதிப் பேருக்கு மேல், அதுல போகாம வராம இருந்திருக்க முடியாது. அதுதான் இப்ப ஊர்ல பலருக்கும் பீதியைக் கிளப்பிவிட்டிருக்கு. அதுக்கடுத்த பீதியும் ஒண்ணு இருக்கு.

இப்ப கேரளத்துல கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் பத்தனம் திட்டா, காசர்கோடு, திருவனந்தபுரம் போன்றவை உண்டு. இந்த நகரங்களில் எல்லாம் பழங்குடியினர் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டல்கள் நிறைய உண்டு. எல்லாருக்கும் இப்ப லீவு விட்டிருக்கிறதால, அதுல படிச்ச அட்டப்பாடியைச் சேர்ந்த மாணவர்கள் இப்ப ஊருக்கு வந்துட்டாங்க. அவங்க மூலம் கரோனா எங்கே எல்லாம் பரவியிருக்குமோன்னு ஊர்க்காரங்க கலங்கிப்போயிருக்காங்க” என்றார் கவலையுடன்.

இந்தக் கரோனா அச்சம் எப்போதுதான் முடிவுக்கு வருமோ?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்