கரோனா அச்சத்தால், அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் வீணாவதால் விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ், தமிழ்நாட்டை மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான பாதிப்பு தொழில் மற்றும் வணிகத்துறையினருக்குதான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயிகளும் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடலூர், ஒருங்கிணைந்த வேலூர், ஒருங்கிணைந்த விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மானாவாரி நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. 8 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர் மிகக்குறைந்த அளவிலேயே அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தாலும் கூட, கரோனா அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்படவில்லை.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிலக்கடலையை அறுவடை செய்வது சாத்தியமில்லை. ஊரடங்கு ஆணை நிறைவடைவதற்குள் நிலைமை கைமீறி போய்விடக்கூடும்.
நிலக்கடலையைப் பொறுத்தவரை பயிரிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் அதிகபட்சமாக 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தாமதிக்கலாம். அதன்பின் நிலக்கடலையை அறுவடை செய்ய முடியாது. அறுவடை காலத்தைக் கடந்த பிறகு செடியிலிருந்து நிலக்கடலை தனியாகப் பிரிந்து விடும். அவற்றில் சில முளைவிடத் தொடங்கும்; மீதமுள்ளவை அழுகி வீணாகி விடும்.
நிலக்கடலையை அறுவை செய்வதற்கான காலம் கடந்துவிட்ட நிலையில், 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலக்கடலை எதற்கும் பயனில்லாமல் வீணாகத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் 80 கிலோ எடையுள்ள 20 மூட்டை நிலக்கடலை மகசூல் கிடைக்கும் நிலையில், ஒரு மூட்டை ரூ.6,000 என வைத்துக்கொண்டால் ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் இழப்பு ஏற்படும்.
அதேபோல், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் பழுத்து அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. அவற்றையும் அறுவடை செய்ய முடியவில்லை. ஒருவேளை அறுவடை செய்தாலும் கூட சந்தைகளுக்குக் கொண்டு செல்வதோ, விற்பனை செய்வதோ இன்றைய சூழலில் சாத்தியமில்லை என்பதால் விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா அச்சம், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட தவிர்க்க முடியாத நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட சூழல் காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டு விட்டனர். இதனால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பு ஏற்படும்.
இவை மட்டுமின்றி, சிறிய பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு ஆகிய பயிர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் அவர்களின் துயரை ஓரளவாவது துடைக்கக்கூடும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருவதாக தெரிகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகத் தெரியவில்லை.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இம்முறை அனைத்தும் நன்றாக அமைந்தாலும் கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய நலன் காக்கும் அரசாகச் செயல்படும் தமிழக அரசுக்கு இந்தப் பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் பொறுப்பு உண்டு. எனவே, நிலக்கடலை மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து, அவற்றை அறுவடை செய்து பணமாக்க முடியாத விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்; அதன் மூலம் அவர்களின் துயரைத் துடைக்க வேண்டும் எனக் கோருகிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago