கரோனா  சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

கரோனா சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "உலகத்தின் பல நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆனால், தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டிக்கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தால், இதனை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனைகளில்அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சுகாதார சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 986 தான். இதன் தேசிய சராசரி ஆயிரம் மக்களுக்கு 0.55 படுக்கைகளாகும்.

12 மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவான படுக்கை வசதிகள்தான் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் 55 ஆயிரம் படுக்கை வசதிகள்தான் உள்ளன. இதைக்கொண்டு தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொள்ள முடியாது. தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கை வசதிதான் உள்ளது.

கட்டமைப்பு வசதி குறித்து பிரதமர் தமது உரையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. மக்களை தனிமைப்படுத்துவது, சமூக விலகல் குறித்தும் தான் பிரதமர் மோடியின் பேச்சின் பெரும் பகுதி இருந்தது. போர்க்கால நடவடிக்கை குறித்து உரையில் இல்லை.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, ஒரு கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 12 ஆயிரத்து 522 தான் உள்ளன. இத்தகைய வசதிகளைக்கொண்டு கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தமிழக அரசால் உரிய சிகிச்சை தர முடியுமா?

இந்தியா முழுவதும் கரோனா சிகிச்சைக்கு 70 மருத்துவமனைகளில் மட்டுமே படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சீனாவில் 420, இத்தாலியில் 340 என்ற அளவில் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மக்கள் திரளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் சில வாரங்களில் கரோனா சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிய வாய்ப்புகள் உள்ளன.

கரோனா சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களின் சேவை மகத்தானது. இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 3 மருத்துவர்களும், 3 செவிலியர்களும் மட்டுமே உள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்கள் நகர்ப்புறங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலை உள்ளது. கிராமப்புறங்களிலும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி துறைகளில் பணியாற்றும் ஊழியர்களையும் இந்த பணிக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மிக, மிக முக்கியமானதாகும். அவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை, அங்கிகள் மற்றும் கண்களைப் பாதுகாக்கும் கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதன் மூலம், இந்த நோயை எதிர்கொண்டு நம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

அறிவிப்புகளில் கடைபிடிக்கிற தீவிரத்தை, கரோனா தடுப்பு நடவடிக்கையில் காட்ட வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்