கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்: போலீஸ் கெடுபிடிக்கு பின்னரே நடமாட்டம் குறைந்தது

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையிலும், மக்கள் அதிகம் நடமாடியதால் போலீஸார் பல்வேறு கெடுபிடிகளை பின்பற்றி நடமாட்டத்தை குறைத்தனர்.

கரோனா வைரஸ் பரவுவதைதடுக்க தமிழக அரசு பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தஉத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் பணிகளில் மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரில்பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் காணப்பட்டது.

மேலும், இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிந்தனர். இதேபோல், மூடப்பட்டிருந்த கடைகளின் முன்பாக சிலர் தரையில் கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மார்க்கெட் பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், போலீஸார் சாலைகளில் சுற்றித் திரிந்தஇளைஞர்களை எச்சரித்தும் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தவர்களை லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர். இதன் பின்னரேசாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

கடலோர கிராமங்களில்..

கடப்பாக்கம் முதல் கோவளம் வரையிலான கடலோர கிராமங்களில் கரோனா வைரஸ் குறித்துபோதிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமப் பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மேலும், கடலோரத்தில் வசிப்பதால் கடலில் இருந்து வரும் உப்புக்காற்று கிருமிகளை அழித்துவிடும் எனக்கருதி இளைஞர்கள் கடற்கரையில் சுற்றித் திரிந்தனர். இதனால், கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்பாக்கம் நகரியப் பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள், நகரில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே சுற்றித்திரிந்த நபர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் தடியடி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக செங்கை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பால், காய்கறி மற்றும்அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த வாகனங்களில் சுகாதாரத் துறை சார்பில் ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி சுற்றியவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். சில இருசக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

கடைகளை மூட எச்சரிக்கை

காஞ்சிபுரம் பகுதியில் முக்கிய வீதிகளான வள்ளல் பச்சையப்பன் வீதி, காந்தி வீதி, ரெட்டை மண்டபம், மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜவீதி உள்ளிட்ட சாலைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும்திறந்திருந்தன. மருந்து கடைகள், மருத்துவமனைகள் ஆகியவை திறந்திருந்தன. சில தேநீர் கடைகள், பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டன. ரோந்து போலீஸார் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூடும்படி எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து தேநீர் கடைகள், பெட்டிக் கடைகள் மூடப்பட்டன.

காஞ்சிபுரம் மார்கெட் பகுதியில் சார் ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உட்பட பலர் சோதனை நடத்தினர். அங்கு தூய்மைப் பணிகளும் நடைபெற்றன. போதிய இடைவெளிவிட்டு பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

வெறிச்சோடிய சாலைகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை- பெங்களூரூ, சென்னை- திருப்பதி, சென்னை- கொல்கத்தா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள், பூந்தமல்லி- திருவள்ளூர், செங்குன்றம்-திருவள்ளூர், பொன்னேரி- திருவொற்றியூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஜார் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மருந்தகங்கள், பால் மற்றும் காய்கறி கடை, மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே நேற்று திறந்திருந்தன. அவ்வாறு திறந்திருந்த கடைகளில் காலை, மாலை வேளைகளில் மட்டுமே பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

நகராட்சி ஊழியர்கள்

பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்றுடிரங்க் சாலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் நகராட்சிஅலுவலகம் எதிரே நின்று கொண்டு,சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். வாகனஓட்டிகளிடம் விசாரித்து அவசியமில்லாத பயணம் மேற்கொள்பவர்களை திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய தேவைக்கான பயணம் மேற்கொள்பவர்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE