கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழகத்துக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் கோடி என வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் கிருமி தொற்றில் இருந்து இந்தியாவையும் அனைத்து இந்தியர்களையும் காப்பாற்றும் நோக்கில் தைரியமான, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வரும் தங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டு, தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை தடுப்பதில் தீர்க்கமான முடிவுடன் மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில், நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகள், வென்டிலேட்டர்கள், தற்காப்பு கவசங்கள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை மேலும்வலுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியதற்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த, நானும் சில தொகுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளேன்.

மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குசிகிச்சை அளிக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்டதனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைஅறைகள் தயாராக உள்ளன. மேலும், தேவையான வென்டிலேட்டர்கள், படுக்கைகள், பாதுகாப்பு கவசங்கள், மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்யவும் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக அதிகளவில் வெளிநாட்டு பயணிகள் வருவதாலும் அருகில் உள்ளமாநிலங்களில் கரோனா தொற்றுஅதிகளவில் அறியப்பட்டுள்ளதாலும் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. அடுத்து வரும் வாரங்கள், மாதங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்பு உடையவர்கள் வரலாம் என்பதால் நாங்கள் உடனடியாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதிகளவிலான கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைத்தல், படுக்கைகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவசங்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி மற்றும் ரசாயனங்கள் போன்றவை வாங்குதல் ஆகியவற்றுக்காக தமிழகத்துக்கு கூடுதல் நிதிஆதாரங்கள் தேவைப்படுகிறது.

இலவச சிகிச்சை

தனியார் மருத்துவமனைகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டியுள்ளது.

மேலும், விரிவான சுகாதாரம் மற்றும் தொற்றுத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்த இக்கட்டான தருணத்தில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.

சிறப்பு நிதி

ஏற்கெனவே மாநில பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்கள் தடை என்பது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நான் ஏற்கெனவே, வேலையிழந்துள்ள குடும்பங்களுக்காக மார்ச் 31-ம் தேதியை கணக்கிட்டு ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ரூ.3,280 கோடிக்கான உடனடி நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளேன். தற்போது 2 வாரங்கள் கூடுதலாக தடையுத்தரவு வந்துள்ளதால், தினக்கூலி ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் போதிய உதவிகள் இன்றி சரிவடையும். எனவே இதுதொடர்பான பொருளாதாரம் மற்றும் நிதியுதவி தொகுப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த நிலையில், சில சிறப்பு நிவாரண தொகுப்புகளை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை திட்டம்

அதன் விவரம் வருமாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாத ஊதியம் வழங்க ரூ.400 கோடி தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில் 50 சதவீதம் பணி நேரம் பாதிக்கப்படும் என்பதால், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு ரூ.500 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் 12 லட்சம் கட்டுமான பணியாளர்கள், 15 லட்சம் இதர அமைப்புசாரா பணியாளர்கள் உள்ளனர். இந்த தடை காலத்தில், அவர்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்காக ரூ.500 கோடி நிதியுதவியை வழங்க வேண்டும்.

இந்த துன்பமான காலகட்டத்தில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பதால், தமிழகத்துக்கு இந்திய உணவுக் கழகத்தில் இருந்து வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொருட்களுக்கு விதிக்கப்படும் விலையில் அளிக்க வேண்டும்.

அதிகளவிலான தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் குறிப்பாக சிறு குறு, நடுத்தர தொழில்களில் உற்பத்தியின்மையால் வரி, வங்கிக்கடன் செலுத்துதலில் பாதிப்பு ஏற்படும். எனவே, அடுத்தஇரண்டு காலாண்டுக்காவதுஅவர்களது வங்கி கடன்தவணைகளை மாற்றி அமைக்க வேண்டும். எவ்வித ஈடும் கோராமல் மூலதன கடன்களை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

எதிர்பாராத சூழல்

இந்த எதிர்பாராத சூழலில் அரசின் வருவாய் குறைவதுடன், செலவின தேவைகள் அதிகரிக்கும். எனவே ஒருமுறை சலுகையாக, 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிபற்றாக்குறை அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதில் தளர்வு அளிக்க வேண்டும். மாநிலங்களின் செலவின தேவைகளுக்காக கடந்த 2019-20-ம் நிதியாண்டில் 33 சதவீதம் வரை கடன் பெற அனுமதிக்கப்பட்டது. அந்தஅனுமதியை 2020-21-ம் நிதியாண்டுக்கும் நீட்டிக்க வேண்டும்.

எனவே, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சவாலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்துக்கு ரூ.4000 கோடியை சிறப்பு நிதியாக உடனடியாக ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்