கரோனா தடுப்பு; ரூ.3,780 கோடி ஒதுக்கீடு; 10,158 படுக்கைகள் தயார் நிலை; அச்சம் வேண்டாம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அரசின் சார்பில் ரூபாய் 3,780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள், மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடாமல் இருக்க 21 நாள் ஊரடங்கை கடுமையாக கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.4,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி மூலம் பேசினார்.

முதல்வர் பழனிசாமி தொலைக்காட்சியில் ஆற்றிய உரை வருமாறு:

“அன்பான சகோதர சகோதரிகளே, இச்சமயத்தில் நான், தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ், சீனாவில் தொடங்கி, காட்டுத் தீ போல், வேகமாகப் பரவி வருவதை, நாம் எல்லோரும் அறிவோம்.

மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள், ஊரடங்கை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வைரஸ் நோய் எப்படி பரவுகிறது, அதைத் தடுப்பதற்கு, ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும், என்பதை அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். கரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவும், கைகள் மூலமும் பரவுகிறது.

தமிழ்நாடு அரசு, இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அரசின் சார்பில் ரூபாய் 3,780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள், மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கருதி, அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.

கட்டிடத் தொழிலாளர்கள், மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு, சிறப்புத் தொகுப்பாக 1000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன், கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். அம்மா உணவகத்தின் மூலம் சூடான, சுகாதாரமான உணவு, தொடர்ந்து வழங்கப்படும்.

மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு நிதியாக கூடுதலாக வழங்கப்படும். அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம்.

இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து, தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவர்கள் அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ, பக்கத்து வீட்டார்களோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, சுகாதாரத் துறைக்கோ, காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம்.

தனிமைப்படுத்துதல் என்பது, உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப் போல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது, விடுமுறை அல்ல, உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், பாதுகாப்பதற்கான, அரசின் உத்தரவு என்பதை உணருங்கள். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள், வெளியூர் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொறுப்பான குடிமக்களாக இருந்து, நம்மையும், சமுதாயத்தையும் காப்போம். மக்களுக்குத் தேவையான, அத்தியாவசியப் பொருட்களான, காய்கறிகள், பால், இறைச்சி, மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக, வெளியில் வரும்போது ஒருவருக்கு ஒருவர் கட்டாயம், 3 அடி இடைவெளி விட்டு, சமுதாய விலகல் என்கின்ற, கோட்பாட்டைக் கடைப்பிடிப்போம். கடுமையான சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரையோ, அல்லது அரசு மருத்துவமனையை அணுகவும். மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

தேவைப்படின், அரசு அறிவித்துள்ள உதவி மையத்தின் எண்கள், 104 அல்லது 1077ஐ தொடர்பு கொள்ளவும். அடிக்கடி கையை சுத்தமாக கழுவுங்கள். கூட்டம் கூடுவதை தவிர்த்திடுங்கள். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொள்ளவும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக, வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் நுழையும் முன்பு, நம் பாரம்பரிய வழக்கப்படி, கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கள். கை குலுக்குவதைத் தவிர்த்து, கை கூப்பி வணக்கம் சொல்லவும்.

விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு. அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி, அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை, மீறுவோர் மீதும், வீண் வதந்திகளை பரப்புவோர் மீதும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பார்கள், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து , அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு, கரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டைக் காப்போம்.

கரோனா தொற்று நோய்க்கு எதிராகத் தொடர்ந்து போராடி, தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என இத் தருணத்தில் உறுதி ஏற்போம்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்