தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. வனத்திற்குள் அத்துமீறி செல்வதும், காடுகளின் தன்மையை உணராமல் கடக்க முயல்வதும் இதுபோன்ற தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருகிறது.
தேனி மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரளாவில் ஏலக்காய், தேயிலைத் தோட்டங்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதால் கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அங்கு தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட கேரள ஜீப்கள் இவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக தமிழக எல்லை மூடப்பட்டது. வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கேரள எல்லையில் குடும்பத்துடன் தங்கியிருந்த பலரும் வனப்பகுதி வழியே சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இதன்படி போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, இவருடைய மனைவி ஜெயஸ்ரீ, இவர்களது மகள் கிருத்திகா(2) மற்றும் தனது உறவினர்கள் சிலர் சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டி பகுதி தோட்டங்களில் இருந்து ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
» மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையம் மூடப்பட்டது: ஒப்பந்த, கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
» துபாயில் இருந்து திரும்பிய கழுகுமலை இளைஞருக்கு மூச்சுத்திணறல்: நெல்லை மருத்துவமனையில் அனுமதி
போக்குவரத்து இல்லாததால் போடிமெட்டு பகுதியில் இருந்து உச்சலூத்து மலைப்பாதை வழியே நேற்று பிற்பகலில் கீழிறங்கத் துவங்கினர்.
இப்பாதை தடை செய்யப்பட்ட வனப்பகுதியாகும். இதன்வழியே வஞ்சிரமணி(25) விஜயமணி(45), கல்பனா(45), மகேஸ்வரி(25), ஒண்டிவீரன்(28) மஞ்சுளா(28), லோகேஸ்வரன்(20) ஆகியோரும் ஒரே குழுவாக வந்து கொண்டிருந்தனர்.
அரளியூத்து என்ற இடத்தை நெருங்கியபோது அப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. 5அடி உயரத்திற்கு காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததால் உச்சியை நோக்கி வேகமாய் பரவியது. புகை அதிகளவில் சூழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பாதையை விட்டு விலகினர். கரடுமுரடான பகுதியில் வழிதெரியாமல் ஓடினர்.
இதில் காட்டுத்தீயில் சிக்கி பலரும் பரிதவித்தனர். உடன் மலையடிவாரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகே காட்டுத்தீயில் தமிழக தொழிலாளர்கள் சிக்கிய விவரம் வனத்துறைக்குத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம், வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம், வருவாய், தீயணைப்பு, மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பலரும் குழுவாக கிளம்பினர்.
இப்பாதை பகுதிவரை தூர்ந்து போய் உள்ளது. மேலும் செங்குத்தாக பாறைகள் மற்றும் இருள்சூழ்ந்ததால் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் செல்வதில் குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் விஜயமணி(45), இவரது பேத்தி கிருத்திகா(2) ஆகியோர் உடல் கருகி இறந்தனர். குழுவினர் சென்று அனைவரையும் மீட்டு டோலி, ஸ்ட்ரெச்சர் மூலம் மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.
இதில் மகேஸ்வரி என்பவர் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நேற்று காலை தேனி அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா(36) உயிரிழந்தார்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், வெயில் நேரங்களில் புற்கள் காய்ந்திருந்ததால் தீ ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அப்பகுதியில் ஏற்பட்ட தீயை களப்பணியாளர்கள் அணைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4-மணிக்கு மீண்டும் தீ என்ற தகவலால் கிளம்பிச் சென்றோம். புகை மேவியதால் உயிருக்குப் பயந்து தொழிலாளர்கள் காட்டிற்குள் வழி மாறிச் சென்று விட்டனர். ஒவ்வொருவரையும் கண்டறிந்து நேற்று அதிகாலை வரை மீட்புப்பணியில் ஈடுபட்டோம் என்றார்.
விலங்குகள், மின்னல், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட சூழ்நிலை இருந்து வரும் நிலையில் வனத்திற்குள் பலரும் அத்துமீறி நுழைவதும், அவசரகாலங்களில் அதனை எதிர்கொள்ள முடியாமல் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தண்ணீருக்கு தவித்த மீட்புக்குழு
செங்குத்தான, பாறைகள் நிறைந்த பாதை என்பதால் மீட்புக்குழு செல்லவதில் சிரமம் இருந்தது. மேலும் இருட்டத்துவங்கியதால் மலையேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்ததால் தாகத்தில் பரிதவித்தனர். இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கூறி இன்னொரு குழுவினர் குடிநீர் கொண்டு வந்து கொடுத்தனர். மேலும் பிளாஸ் டார்ச், மொபைல் டார்ச் போன்ற எளிய உபகரணம் மூலம் பல உயிர்களை இக்குழு காப்பாற்றியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?
வனஉயிரினங்கள் தாக்கி இறந்தால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து உயிரிழப்பு, காயம் ஏற்பட்டதால் வனத்துறை மூலம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தினக்கூலிகள். எனவே வருவாய்த்துறை மூலம் இழப்பீடு வழங்க வேண்டும். உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கணி நினைவு மறைவதற்குள் இன்னொரு தீ விபத்து
தேனி வனக்கோட்டம் போடி வனச்சரகத்திற்கு உட்பட்டது குரங்கணி. இங்கு கடந்த 2018-ல் சிலர் அத்துமீறி வனப்பகுதிகளுக்குள் சென்று மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மார்ச். 11-ம் தேதி நடைபெற்ற தீவிபத்தில் 23பேர் இறந்தனர்.
அன்று முதல் இப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ளது. தற்போது கோடை வெப்பம் துவங்கி உள்ளதால் மலையில் தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கடந்த பிப். 14-ம் தேதி முதல் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குரங்கணி தீவிபத்து நடைபெற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் அதே மார்ச் மாதத்தில் மீண்டும் இதுபோனற விபத்து ஏற்பட்டு 4பேர் இறந்தது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குரங்கணி தீவிபத்து ஏற்பட்ட 10கிமீ.தூரத்திற்குள் இந்த சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago