144 தடையுத்தரவு என 30 மணிநேர இடைவெளி கொடுத்ததால் பேருந்துகளில் பொதுமக்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதுபோல் நெருக்கியடித்துப் பயணிக்கிறார்கள். கரோனா பாதித்த நகரங்களில் இருந்து செல்லும் இவர்களால் கிராமங்களில் கரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசு கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை முதல் 144 தடையுத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்தது. இதனால் நேற்று மாலை சொந்த ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒன்றுகூடுதல் இருக்கக்கூடாது என்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை அமைந்தது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் அதை பரப்பும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவானது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச உணவுப் பொருட்கள், நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கின்றன. ஆனாலும், நோய்த்தடுப்புக்கு அடிப்படையான சமூக இடைவெளியை உறுதி செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கவில்லை.
» உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் மருத்துவர்களுக்கான கவச உடைகள் இல்லை: தினகரன் கவலை
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும், இருமும்போதும் அவருக்கு 3 அடி சுற்றளவில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் இதை தடுக்க வேண்டும். இதற்கான ஒரே தீர்வு ஊரடங்கைக் கடைப்பிடிப்பது தான்.
உலக சுகாதார நிறுவனமும் இதைத் தான் வலியுறுத்துகிறது. இதை மதித்து உலகம் முழுவதும் 140 நாடுகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் 130 கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் மக்கள் வீதிகளுக்கு வருவதை தடுக்க ராணுவத்தினர் ரோந்து வருகின்றனர். இதுதான் சிறந்த சமூக இடைவெளி ஆகும்.
தமிழ்நாட்டிலும் இதே அளவு வலிமையான சமூக இடைவெளியை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு வாரமாக நான் வலியுறுத்தி வருகிறேன். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் தினமும் இதுகுறித்து விளக்கி வருகிறார்.
ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு தான் பிறப்பிக்கப் படும் என்று தமிழக முதல்வர் நேற்று மாலை அறிவித்த நிலையில், உடனடியாக அவரை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு, 114 தடையால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது என்றும், ஊரடங்கு ஆணை தான் பயனளிக்கும் என்றும் விரிவாக விளக்கினேன்.
ஆனால், அதன்பிறகும் தமிழகத்தில் 144 தடை ஆணை தான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் தேநீர் கடைகள் வரை ஏராளமான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நோய்த் தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளின் தீவிரத்தை அரசு புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் 30 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 30 மணிநேரம் இடைவெளி விடுத்து இன்று மாலை 6 மணிக்குதான் நடைமுறைக்கு வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தான் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஏதோ விடுமுறைக்கு வீடுகளுக்கு செல்வது போல பேருந்துகளில் கூட்டம், கூட்டமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல ஊர்களில் பொதுமக்கள் பேருந்துகளின் கூரைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். கரோனா பாதித்த நகரங்களில் இருந்து செல்லும் இவர்களால் கிராமங்களில் கரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தேநீர் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கு தேவையின்றி கூட்டம் சேருவதற்கும், அதனால் நோய் பரவுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். கரோனா நோய்த்தடுப்பின் அடிப்படையே ஓரிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்பதுதான். ஓரிடத்தில் இருவர் இருந்தால் கூட, அவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால், 144 தடை என்பது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 5 பேர் வரை கூட அனுமதிக்கிறது.
5 பேருக்கு மேல் கூடினால் கூட, அவர்களிடம் ஆயுதம் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 144 தடை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருப்பதால், 5 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குழுவோ, குடும்பமோ தமிழகத்தில் எங்கும் சுதந்திரமாக சுற்றி வர முடியும். இதுவா கரோனா பரவலை தடுக்கும்?
ஜெர்மனியில் கரோனா நோய்ப்பரவல் வேகம் ஒரு கட்டத்தில் அதிகமாக இருந்த நிலையில், அங்கு கடைபிடிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு காரணமாக, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்று முதல் குறையத் தொடங்கியுள்ளது. இது தான் முன்மாதியான நடவடிக்கை ஆகும். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் முழுமையாகவும், பகுதியாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் எந்த வாகனத்தில் பயணித்தாலும், அவை பறிமுதல் செய்யப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் 144 தடைக் காலத்திலும் சொந்த ஊர்தியில் சுதந்திரமாக பயணிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை நோய்த்தடுப்புக்கு உதவாது.
பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்; செயல்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் சில செயல்பாடுகள் அவ்வாறு அமையாதது நல்வாய்ப்புக் கேடானது ஆகும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago