கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல் தெரிவிக்காத தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத்தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த தேவையான திட்டங்களையும் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாநில, மத்திய அரசுகளின் முயற்சிகளுக்கு தமிழக மக்கள் அளித்துள்ள ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு நிகழ்வு தமிழகத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. இது தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து,மெட்ரோ ரயில் போக்குவரத்துகளும் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் அரசுதிட்டமிட்டு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகளில் தற்போதுள்ள 92,406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும்.
மேலும், தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிகிச்சைக்கான கூடுதல் படுக்கைவசதிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு, மத்திய அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தீவிர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 560 வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த தேவையான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மருந்துகளும் இருப்பில் உள்ளன.
தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் ஆலோசித்து தமிழகத்தில் உள்ள பெரிய தனியார்மருத்துவமனைகளிலும் ஏற்கெனவே இருக்கக் கூடிய படுக்கைவசதிகளில் 750 படுக்கை வசதிகளை கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறான செய்திகளை பரப்புவோர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால் அவரைப் பற்றிய தகவல்களை அருகில் உள்ளசுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணிநேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தொலைபேசி எண்கள்
இதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 044-29510500, 29510400, 94443 40496, 875 48477 மற்றும் இலவச எண்ணான 1800 120 555550 ஆகியவற்றில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத்தலைவர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago