பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கான இழப்பீடு திட்டம்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, முற்றிலும் பழுதடைந்துள்ள மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பழைய கட்டடத்திற்கு பதிலாக, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள் (நீதிமன்றங்கள்) துறை குறித்த அறிவிப்பு:

குற்ற வழக்கு தொடர்புத் துறை மற்றும் சட்டக் கல்வி இயக்குனரகங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சொந்தக் கட்டிடம், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சார்பாக அறிவிப்பு:

* 41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டிட பராமரிப்புப் பணிகள், தச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* சென்ற ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும், 10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு 10 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் மேசை, நாற்காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும்.

* அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் தற்போது 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில், 8 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3.23 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* சென்னை, மைலாப்பூரில் 9 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல ஆணையரகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் "அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பக"த்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், 10 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த அறிவிப்பு:

* மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும்.

* சேலம் மாவட்டத்தில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அரசு, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 1.31 ஏக்கர் நிலம் வழங்கி, 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்.

* பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட ஏதுவாக, "மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020"-க்கான நிதியம் 5 கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பாக அறிவிப்பு:

* சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கூடலூர், மணமேல்குடி, திருவாடனை மற்றும் மண்டபம் ஆகிய 4 வட்டாரங்களிலும், வேலூர், பேர்ணாம்பட்டு, மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், பள்ளப்பட்டி, நாகப்பட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டிணம், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோவில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய 18 பகுதிகளிலும், சமுதாயக் கூடம் அமைத்தல்.

* நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டுதல், புது அரசு மேல்நிலைப் பள்ளிகள் கட்டுதல், தொழிற் பயிற்சி நிலையம் அமைத்தல், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான விடுதிகள் கட்டுதல், மதராசா பள்ளிகளுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினிகள் வழங்குதல் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள், 24.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,301 விடுதிகளுக்கு டிடிஎச் இணைப்புடன் எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகள், 5 கோடியே 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* இத்துறையின் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இது தவிர, பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருடப் பிறப்பு, சுதந்திர தினம் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுக் கட்டணமாக தற்போது பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 40 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிறமலைக் கள்ளர் பள்ளிகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,354 விடுதிகளில், 1,290 விடுதிகள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இக்கட்டடங்களில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்.

* இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,099 பள்ளி விடுதிகளில் 11 பள்ளி விடுதிகள் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும்”.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்