ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம்: கடைகள் அடைப்பு, பேருந்துகள் இயங்கவில்லை- தனித் தீவானது ராமேசுவரம்

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 100 சதவீதம் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமான ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் 100 சதவீத பெரிய நிறுவனங்கள், பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை, உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

டீக்கடை, பெட்டிக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. ராமநாதபுரம் நகரில் அரண்மனை, சின்னக்கடை பஜார் பகுதிகளில் எப்போதும் தெருவோர காய்கறி கடைகள், பழக்கடைகள் நிறைந்திருக்கும், ஆனால் இந்தக்கடைகளும் நேற்று இல்லை. எங்கு பார்த்தாலும் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றியும், கடைகள் இன்றியும் வெறிச்சோடிக் காணப்பட்டது. அரசு பேருந்துகள் இயங்காததால் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் இறைச்சிக்கடைகள், மீன் கடைகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. ராமநாதபுரம், பரமக்குடி ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. மொத்தத்தில் மாவட்ட மக்கள் ஊரடங்கு கடைபிடித்தனர்.

ராமநாதபுரம், பரமக்குடியில் சில திருமண மஹால்களில் திருமணம் மற்றும் காதணி விழா நடைபெற்றது. இதில் மிகக் குறைந்தளவே மக்கள் கலந்து கொண்டனர்.

தனித் தீவான ராமேசுவரம்..

சுய ஊரடங்கைத் தொடர்ந்து, ராமேசுவரம் தீவு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தின்றி தனிமைத் தீவாக காணப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபட, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.

அதன்படி, இன்று காலை புனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேசுவரம் தீவு, மக்கள் நடமாட்டம் இன்றியும், போக்குவரத்து இன்றியும் தனிமைத் தீவாக காணப்பட்டது. ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான அக்னி தீர்த்தக் கடற்கரை, தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் ஆட்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் வழக்கமாக சுவாமிக்கு 6 கால பூஜை நடைபெற்றது. நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பயணத்தின் படி வட மாநில சுற்றுலா பயணிகள் நூற்றுக்கும் குறைவானோர் வெளியில் செல்ல முடியாமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. அதிகாலையில் திறந்திருந்த ஒரு சில சிறு டீ கடைகளும் காலை 7 மணிக்குப் பின் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்கள் உணவுக்காக சிரமப்பட்டனர்.

நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதும், ராமேசுவரம் பேருந்துநிலையம், வேர்கோடு, துறைமுகம் பகுதி, பாம்பன், ராமநாதபுரம் நகரில் பல இடங்கள் என மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்