கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு: வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிடும் பெண்கள்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில்வே நிலையம்,பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு பலர் வந்துசெல்வதால், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்து வருகிறார்.

`செஞ்சிலுவைச் சங்கம் உட்படபல்வேறு சங்கங்களுடன் தன்னார்வலர்கள் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்' என்றும் ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கரோனா வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க, பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஒருபகுதியாக, கிராமத்துப் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கின்றனர்.

பொதுமக்கள் வந்துசெல்லும் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவல கங்களில், கை கழுவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் பொது இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைத்து, மக்களுக்கு வைரஸ்பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் உடல் வெப்பநிலை அளவிடும் பணிகளும் நடக்கின்றன.

தாம்பரம் அருகே முடிச்சூரில் பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகின்றனர். இதுகுறித்துஅவர்கள் கூறியதாவது:

மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கப்படும். மஞ்சள் கலந்த நீரை தெளிப்பதால் சிறுசிறு நச்சுப் பூச்சிகள், ஈக்கள், கிருமிகள் வீட்டுக்குள் நுழையாது. இந்த நடைமுறையை நாம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர். தற்போது கரோனா அச்சத்தால் இந்த நடைமுறைகளை கடைபிடிக்கிறோம். இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE