கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தீக்குச்சி தயாரிப்புக்கான மரத்தடிகள் கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளதால், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடும் அபாயம் உருவாகி உள்ளது.
தீப்பெட்டி தயாரிப்பின் இதயமாக இருப்பது குச்சிகள் தான். தமிழகம் முழுவதும் தீக்குச்சி தயாரிப்பில் சுமார் 500 கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த குச்சிகள் தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இங்குள்ள குச்சி கம்பெனிகளில் மரத்தடிகளை சுமார் ஒடி அடி அளவுக்கு அறுத்து, பட்டைகளை உரித்த பின்னர் இயந்திரம் மூலமாக குச்சிகள் செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தீப்பெட்டி ஆலைகளுக்கு குச்சிகள் கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு மருந்தில் முக்கி தீக்குச்சி செய்யப்படுகிறது. கோவில்பட்டி பகுதியில் இருந்து கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி, சாத்தூர், குடியாத்தம், தர்மபுரி மாவட்டங்களில் இயங்கும் தீப்பெட்டி ஆலைகளுக்கு தீக்குச்சிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
» கீழடி 6-ம் கட்ட அகழாய்வு: கொந்தகை கிராமத்தில் அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இதில் கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு இருப்பதால் அங்கு வரவேண்டாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அங்கு மரம் அறுக்க வேலையாட்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக வேலை எதுவும் நடைபெறவில்லை.
தமிழகத்துக்கு கடந்த வாரம் மரத்தடி லோடு வந்தது. அதனை வைத்து தான் குச்சிகள் தயாரித்து வருகின்றனர். அந்த மரத்தடிகளை கொண்டு இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே குச்சிகள் தயாரிக்க முடியும். அதன் பின்னர் குச்சி கம்பெனிகள் மட்டுமின்றி அதனை நம்பி உள்ள தீப்பெட்டி ஆலைகளும் மூடும் நிலை ஏற்படும். இதனால் குச்சி தயாரிப்பு, தீப்பெட்டி ஆலைகள், சுமை தொழிலாளிகள் என சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குச்சி கம்பெனி உரிமையாளர் டி.ராஜன் கூறும்போது, கேரளாவில் இருந்து அல்பீசா, மட்டி ரக மரத்தடிகள் வருகின்றன. கர்நாடகாவில் குச்சி முருங்கை மரத்தடிகள் வாங்குவோம். இதனை நாங்கள் சென்று பார்த்து தான் முன்பணம் கொடுத்து வருவோம். அவர்கள் அதன் பின்னர் மரத்தை வெட்டி, அந்த தடிகளை லாரிகள் மூலமாக எங்கள் கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த வாரம் முன்பு நான் கேரளா செல்லலாம் என்றிருந்தேன். அங்குள்ளவர்கள் என்னை வரவேண்டாம் என கூறிவிட்டனர். இங்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் வேலையாட்கள் வரவில்லை என்றனர். தற்போதுள்ள மரத்தடிகளை கொண்டு இன்னும் 4 நாட்கள் மட்டுமே குச்சிகள் தயாரிக்க முடியும். அதன் பின்னர் கம்பெனியை மூட வேண்டிய நிலை தான் உள்ளது.
ஏற்கெனவே, கைகளால் செய்யும் தீப்பெட்டி ஆலைகள் குறைந்து இயந்திர தீப்பெட்டி உற்பத்தி வந்தபின்னர் குச்சிகளை அவர்களே தயாரிக்கும் நிலை வந்துவிட்டது. இது ஒரு பாதிப்பு என்றால், நாங்கள் தயாரிக்கும் பொருளுக்கு எங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இங்குள்ள தொழிலாளர்கள் தான் கேரளாவில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர்கள் கேரளாவுக்கு செல்லவில்லை. இதனால் மரத்தடிகள் வருகை நின்று, தீப்பெட்டி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், என்றார் அவர்.
மற்றொரு குச்சி கம்பெனி உரிமையாளர் ஆர்.விக்னேஸ்வரன் கூறுகையில், ஏற்கெனவே கேரள மாநிலத்தில் மரம் அறுக்க முன் பணம் கொடுத்து விட்டோம். அங்கு மரமும் அறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், மரத்தடிகள் ஏற்றுவதற்கு ஆட்கள் இல்லை. மரத்தடிகளை 10 நாட்களுக்குள் குச்சிகளாக மாற்றினால் லாபம். இல்லையென்றால் அதில் ஈரப்பதம் இல்லாமல் போய், அதனை விறகாக மட்டும் தான் பயன்படுத்த முடியும். இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது.
இதே போல், ஐரோப்பா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாப்புலர் மரத்தடிகளின் வரத்து ஏற்கெனவே 80 சதவீதம் குறைந்துவிட்டது. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக மரத்தடிகள் வரவில்லை. மேலும், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago