கரோனா வைரஸ்: மார்ச் 31 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு 

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பிரதமர் மோடி மார்ச் 19-ம் தேதி பொதுமக்களுக்கு உரையாற்றினார். அதில் கரோனா வைரஸ் தாக்கம் எந்த அளவுக்கு உலக அளவில் இருக்கிறது, மக்கள் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து மார்ச் 22-ம் தேதி 'சுய ஊரடங்கு' முறையை அமல்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாகத் தனது பேச்சில், " வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த தனபால், ''கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும்'' என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி காலை, மாலை இரு வேளைகளிலும் சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறத் திட்டமிடப்பட்ட நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE