தமிழகம்

ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையங்கள் உட்பட சென்னையில் அனைத்து போட்டித்தேர்வு பயிற்சி மையங்களும் மூடல்- சில மையங்களில் ஆன்லைன் மூலமாக பயிற்சி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில், ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து போட்டித் தேர்வு பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. ஒருசில மையங்களில் மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதிவரை மூடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. எனினும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து போட்டித்தேர்வு பயிற்சி மையங்களும் கடந்த 17-ம் தேதி முதல் மூடப்பட்டன. அங்கு தங்கியிருந்து படித்துவந்த மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மைய நிர்வாகிகள் சிலர்கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி மையங்கள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்த மறுநாள் (மார்ச் 17) முதல்மார்ச் 31 வரை எங்கள் மையங்களுக்கு விடுமுறை விட்டுள்ளோம். மக்களின் நலன்கருதி அரசு நடவடிக்கை எடுக்கும்போது கண்டிப்பாக அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

அதேபோல், சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் இயங்கிவந்த தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துக்கும் மார்ச் 31 வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருந்த வெளியூர் மாணவ-மாணவிகள் கடந்த 17-ம் தேதி தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, ஒருசில பயற்சி மையங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிப்பதுடன் தேர்வையும் ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT