கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தென்காசியில் 4 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்திவைப்பு- குற்றாலத்தில் 99% கடைகள் அடைப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டத்தில் 4 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் வருகிற 31-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கூட்டம் அதிகம் உள்ள கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்தை வருகிற 31-ம் தேதி வரை நிறுத்திவைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 4 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தினமும் சராசரியாக 500 பேருக்கு மேல் கூடும் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வருகிற 31-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது 31-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில்கள் அனைத்திலும், ஆகம விதிப்படி கால பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும்” என்றனர்.

கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால் கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோயிலுக்கு வெளியில் நின்றி கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கையாக கோயில்களில் நடை சாத்தப்பட்டதற்கு பெரும்பாலான பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து இல்லாததால் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதால், குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. குற்றாலத்தில் 99% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குற்றாலம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பூங்காவும் மூடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE