தேவாலயங்களில் கூட்டு ஜெபம் வேண்டாம்; வீட்டில் விவிலியத்தை வாசியுங்கள்: மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் சுற்றறிக்கை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தேவாலயங்களில் கூட்டு ஜெபம் வேண்டாம்; வீட்டில் விவிலியத்தைத் தவறாமல் வாசியுங்கள் என வலியுறுத்தி மதுரை கத்தோலிக்க திருச்சபை பேராயர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் வருகை மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "20−03−2020 முதல் 31−03−2020 ம் நாள் வரை நமது ஆலயத்தில் திருப்பலியோ வழிபாடோ நடைபெறாது (வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை மற்றும் ஞாயிறு திருப்பலி உட்பட).

ஒவ்வொரு குடும்பமும் தங்களது இல்லத்திலேயே இருந்து ஜெபம் செய்யும்படி கேட்டூக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் குடும்பமாக ஜெபிக்குமாறு ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அது செபமாலையாகவோ,குடும்ப ஜெபமாகவோ,அல்லது மாதா டி.வி.,யில் ஒளிபரப்பப்படும் திருப்பலி பார்ப்பதாகவோ இருக்கலாம்.

இந்த நாட்களில் விவிலியத்தை தவறாமல் வாசித்து தியானிக்கத் திருத்தந்தை அவர்களால் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தனிப்பட்ட முறையில் பகல் நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்க விரும்புகிறவர்கள் ஜெபிக்கலாம்.

அதனை குழுவாகச் செய்யவேண்டாம் இவற்றை நாம் கடைப்பிடிப்பது மார்ச் 31 வரைதான்.

31−03−2020 க்குப்பிறகு அரசின் அறிவிப்பையொட்டி ஆயர் சுற்றறிக்கை வாயிலாக நம்மோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு பங்குத்தந்தை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE