கிர்கிஸ்தானில் இருந்து திருவள்ளூர் வந்த 13 பேருக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை

கிர்கிஸ்தானிலிருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து, திருவள்ளூர் வந்த புறநகர் மின்சார ரயிலில் நேற்று காலை 11.30 மணியளவில் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 13 பேர் திருவள்ளூர் வந்தனர். தகவலறிந்த டவுன் போலீஸார், ரயில் நிலையம் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தெரியவந்ததாவது:

கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தநூர்பேக்(39) என்பவர் தலைமையிலான 13 பேர் கொண்ட முஸ்லிம்கள், கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லி வந்துள்ளனர். அங்கு நிஜாமுதீன் மார்க்கஸ் பகுதியில் உள்ள தப்ளிக் ஜமாத் மசூதியில் தங்கியிருந்து, புதுடில்லியை சுற்றியுள்ள மசூதிகளுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

பின்னர், கடந்த 17-ம் தேதி இரவு ரயிலில் புறப்பட்டு நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவர்கள், அங்கிருந்து புறநகர் மின்சார ரயில் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தனர். அவர்கள் திருவள்ளூரில் உள்ள ஜமீயா மசூதியில் தங்கி, குர்ஆன் மற்றும் பிற விஷயங்கள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு வாரகாலம் பிரசங்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, கிர்கிஸ்தான் குழுவினரை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையினர், அவர்களுக்கு உடல் வெப்பத்தை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் மூலம், கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்ப உத்தரவு

இருப்பினும், போலீஸ், வருவாய்த் துறை அதிகாரி கள் அக்குழுவினரின் ஆவ ணங்களை ஆய்வு செய்தனர். அவர்களை கிரிகிஸ்தானுக்கு திரும்ப மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியதால், அவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கிர்கிஸ்தான் அனுப்பப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE