அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி 'தூய்மைப் பணியாளர்கள்' என்று அழைக்கப்படுவார்கள் என சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
எரிசக்தித்துறை
1. வினைத்திறன் மிகு மின் அளவிகள் பொருத்தும் திட்டம் ஒன்று சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, 4,300 கோடி ரூபாய் செலவில் முதலில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
» மார்ச் 31 வரை டாஸ்மாக் கடைளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
2. மதுரை மாவட்டம், அழகர்கோவில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மற்றும் மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
110 கிலோ வோல்ட் அளவிலான 22 துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பணிகள் 1,998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
3. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீள பாதை, 300 கோடி ரூபாய் செலவில் புதைவடங்களாக மாற்றப்படும்.
4. 23 இடங்களில் புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், செயல்பாட்டில் இருக்கும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ / திறன் உயர்த்தியோ, அமைக்கப்படும். இப்பணிகள் 187 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
1. 2020-21 ஆம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக் குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட் / பேவர் பிளாக் சாலை வசதி, தெரு விளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
3. 1,044 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச் சாலைகள் 553.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
4. 2020-21ஆம் நிதி ஆண்டில், 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
5. ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே 2020-21ஆம் ஆண்டில் 10 ஆயிரம் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள் 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
6. ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டில் 650 கி.மீ. நீளத்திற்கு 440 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
7. 2020-21 ஆம் நிதியாண்டில், 9,000 மாட்டுக் கொட்டகைகளும், 6,000 ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் 258.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
8.2020-21 ஆம் ஆண்டில் 500 தனி நபர் கிணறுகள் தலா 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 500 சமுதாய கிணறுகள் தலா 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் ஆயிரம் கிணறுகள் 98 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
9. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடிங்கள் கட்டித் தரப்படும்.
10. 2019-20-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
11. 2020-21 ஆம் நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன் பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 முதியோர் சுய உதவிக் குழுக்கள் ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
1. பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பழுதடைந்துள்ள சாலைகள், நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
2. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளான துடியலூர், வடவள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் வீரகேரளம் பகுதிகளை உள்ளடக்கிய 14 வார்டுகளில், 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
3. மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் கட்டமாக, எஞ்சியுள்ள 57 வார்டுகளிலும், குடிநீர் விநியோகக் குழாய் பதித்து, வீட்டு இணைப்புகள் வழங்க, 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. திறன்மிகு போக்குவரத்து முறையை செயல்படுத்திட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
5. சென்னையில் சிறுதொழில் முனைவோர் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி விளக்கும் பாலமாக 'புதுமுறைக் காணல் மையம்' ஏற்படுத்தப்படும். இம்மையம், சீர்மிகு நகர நிறுவனத்தின் கீழ் செயல்படும்.
6. மாநிலத்தில் பசுமைச் சூழலை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பயன்பாடின்றி உள்ள திறந்தவெளி நிலங்களில், 'மியாவாக்கி' முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும்.
7. மாநராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கப்படும்.
8. தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் நகராட்சியின் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு, இங்கே வாழ்கின்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்நகராட்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு ஒரு புதிய ஓடுதளமும், வாரச்சந்தை உள்பட பல உட்கட்டமைப்புகளும் அமைக்கப்படும். இது தவிர, இந்நகரிலுள்ள பூங்காக்கள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கும்.
9. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் பணியைச் செய்து வருகிறார்கள்.
பொது இடங்களில் தூய்மையை பேணிக் காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவர்களது நலனைப் பேணுவதில் அக்கறை கொண்டு, இப்பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல், அவர்தம் குடும்பத்தினருக்கென குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்துதல், அவர்களது குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் கருதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் மற்றும் திறன் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி 'தூய்மைப் பணியாளர்கள்' என்று அழைக்கப்படுவார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago