தமிழகம்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சோதனை மையம் இன்று முதல் செயல்படும்- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் இன்றுமுதல் செயல்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசியதிமுக உறுப்பினர் க.பொன்முடி, “கரோனா வைரஸைக் கண்டறிய தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை வசதியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள் ளது?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸைக் கண்டறிய 4 பரிசோதனை மையங்கள் உள்ளன. 5-வதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (இன்று) முதல் பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும். இதற்கான அனுமதியை ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது. நேற்று (மார்ச் 17) ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நான் ஆய்வு மேற்கொண்டபோது, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக வந்திருந்தார்.

காய்ச்சல் இருந்தால் மட்டும்

அவருக்கு காய்ச்சல் இல்லை. கரோனா வைரஸ் பாதித்த வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் சென்றுவரவில்லை. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அருகிலும் அவர் இருக்கவில்லை. இருப்பினும், அவர் பரிசோதனைக்காக வந்திருந்தார். தற்போது தமிழகத்தில் உள்ள 5 பரிசோதனை மையங்களிலும் தலா 100 என தினமும் 500 நபர்களுக்கு மட்டும்தான் பரிசோதனை செய்ய முடியும். எனவே காய்ச்சல் இல்லாத, பாதிக்கப்பட்ட வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்குச் செல்லாதவர்கள் யாரும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தனியார் மருத்துவமனைகளில்

வேலூர் சிஎம்சி போன்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் செயல்படத் தொடங்கும். இதற்கான அனுமதியை ஐசிஎம்ஆர் வழங்கவுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “கரோனா வைரஸுக்குராஜஸ்தானிலும், அமெரிக்காவிலும் மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?” என்று துணை கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “சென்னையில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையில் நடந்த சர்வ தேச கருத்தரங்கில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துஆராயப்பட்டன. விரைவில் நல்ல செய்தி வரும்" என்றார்.

SCROLL FOR NEXT