உ.பி. அரசின் அறிவிப்பு போல் தமிழகத்திலும் 9-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்கவேண்டும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

''கரோனா வைரஸ் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உத்தரப் பிரதேசம், கோவா, டெல்லி போன்ற மாநிலங்களில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, அதை ஒன்பதாம் வகுப்பு வரை நீட்டித்து, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்கிற நிலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் தயாரிப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அடுத்தக்கட்ட சூழலைப் பொறுத்து தேர்வுத் தேதிகளை அரசு அறிவிக்க வேண்டும்.

தற்போது பொதுத்தேர்வு எழுதும் இடங்களில் மாணவர்களை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். தேர்வு மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். மாணவர்கள் கைக்குட்டை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் அல்லது டிஷ்யூ பேப்பரை அரசு வழங்க வேண்டும்.

தேர்வு மையங்களில் விடைத்தாள் திருத்தும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வர வாய்ப்பு உள்ளதால் அனைத்து நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளி விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து அடுத்த ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் இல்லாத நிலையில் எவ்விதக் கற்பித்தல் பணியும் நடைபெறாது என்கிற நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கரோனா பாதிப்புக்குள்ளான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வீடுகளிலே இருப்பதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்க்க இயலும் என்று அறிவுறுத்தப்பட்டு அந்த முயற்சியும் வெற்றி பெற்றிருக்கிறது.

வந்தபின் மருத்துவ உதவிகள் செய்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதை தமிழக அரசு உணர்ந்து அனைத்து பொதுமக்களும் பொது இடங்களுக்கு வராமல் வீடுகளிலேயே இருக்க அறிவுரை தர வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் அவசரத் தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்குப் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்”.

இவ்வாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE