தமிழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது; சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழை கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்குவதற்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கின்றன. தமிழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் இந்த துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்நாள் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை கடைப்பிடிக்கும் அனைத்து அரசு பள்ளிகளும் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக கற்றுத் தருகின்றன. மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை 90 விழுக்காடு பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு விட்டது.

மொழிச் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ளும் பள்ளிகள் மட்டும் தான், தமிழ் கற்பிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி, தமிழை கட்டாயப் பாடமாக்குவதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் மூலம் விலக்கு பெற்றுள்ளன. உயர் நீதிமன்றம் அளித்த விலக்கு தற்காலிகமானது தான். உயர் நீதிமன்றம் விலக்கு அளித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இனியும் கட்டமைப்பு இல்லை என்று கூறி அந்த பள்ளிகள் தப்பிக்க முடியாது.

வரும் கல்வியாண்டில் அந்த பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக்காவிட்டால், தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை அணுகி, அவற்றுக்கு அளிக்கப்பட்ட விலக்கை நீக்கி தமிழை கட்டாயப் பாடமாக்க முன்வர வேண்டும்.

மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்வது தான் மிகப்பெரிய சவால் ஆகும்.

2007-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய அரசு, அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து 2015-16 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கியது. அதற்கான அரசாணையை கடந்த 18.09.2014 அன்று தமிழக அரசு பிறப்பித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் 90% பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்படவில்லை. தமிழக அரசின் ஆணையை மதிக்காத தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது தமிழக அரசு இனியும் கருணை காட்டக்கூடாது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இயங்கி வரும் ஐசிஎஸ்இ பாடத்திட்டம், சிஐஎஸ்சிஇ பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகியவற்றை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கி தனி அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமின்றி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டம், சிஐஎஸ்சிஇ பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகிய பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளிலும் மாநில மொழிப் பாடம் கட்டாயமாகும். மாநில மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கவும் அந்த மாநிலங்களின் உள்ளூர் மொழி கட்டாயப்பாட சட்டம் வகை செய்கிறது.

உதாரணமாக கேரளத்தில் உள்ள எந்த கல்வி வாரிய பள்ளிகளாக இருந்தாலும், மலையாளத்தை கட்டாயப் பாடமாக கற்பிக்கத் தவறினால் முதல் இரு முறை எச்சரிக்கையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் மலையாள மொழிப் பாடத்தை கற்பிக்கத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கேரள அரசு எச்சரித்திருக்கிறது.

அதேநேரத்தில் மலையாளத்தை கட்டாய பாடமாக கற்பிக்கும் பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய தண்டனை மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் 624 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. மற்ற பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் ஆகும். அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழை படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்க கூடாது.

எனவே, தமிழகத்திலுள்ள சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்